தேர்தல் ஆணைய கூட்டத்தில் ஜெயக்குமாரின் செயலால் அதிர்ந்து போன ஓபிஎஸ் ஆதரவாளர்
ஜெயக்குமார், செல்வராஜ் இருக்கைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த அதிமுக பெயர் பலகையை எடுத்து தனக்கு முன்பு வைத்து கொண்டார்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணிகள் இன்று முதல் தொடங்கப்படவுள்ளது. அந்த வகையில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது. ஆதாரின் அடிப்படையில் வாக்காளர் அடையாளத்தை உறுதி செய்யும் வகையில் இந்த பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அங்கீகரிக்கும் தேர்தல் சட்ட (திருத்தம்) மசோதா, 2021 டிசம்பரில் குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ தலைமையில் மாநிலத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரிதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் பிரிதிநிதிகள் கலந்து கொண்டனர்.
#JUSTIN | தேர்தல் ஆணைய கருத்துக் கேட்பு கூட்டம் - கோவை செல்வராஜ் வசம் இருந்த அதிமுக போர்டை தனது பக்கம் எடுத்து வைத்த ஜெயக்குமார்.https://t.co/wupaoCQKa2 | #AIADMK #Jayakumar #edappadikpalaniswami pic.twitter.com/jynfNSPDjv
— ABP Nadu (@abpnadu) August 1, 2022
கூட்டத்தில், திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி, எம்எல்ஏ பரந்தாமனும் பங்கேற்றனர். பிளவு ஏற்பட்டுள்ள அதிமுகவின் சார்பில் யார் கலந்து கொள்வார்கள் என கேள்வி எழுந்த நிலையில், இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சார்பாக கோவை செல்வராஜ் கலந்து கொண்டார். ஈபிஎஸ் தரப்பு வருவதற்கு முன்பே, கோவை செல்வராஜ் கூட்டத்திற்கு வந்திருந்தார். அவரின் இருக்கையின் முன்புதான், அதிமுக பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது.
பின்னர், வந்த ஜெயகுமார், செல்வராஜ் இருக்கைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த அதிமுக பெயர் பலகையை எடுத்து தனக்கு முன்பு வைத்து கொண்டார்.
இதனால், கூட்டத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அதிமுகவின் கருத்தை கூறியிருக்கிறோம். இறந்தவர்களின் பெயரை வாக்காளர் அட்டையிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்" என்றார்.
கூட்டத்திற்கு ஓபிஎஸ் தரப்பு வந்திருப்பது குறித்து பேசிய ஜெயகுமார், "அதிமுக சார்பில் நாங்கள் இருவர் மட்டுமே அதிகாரப்பூர்வமாக கலந்து கொண்டுள்ளோம். ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் எந்த கட்சியை சேர்ந்தவர் என்றே தெரியவில்லை" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்