நீட் தேர்வை நிரந்தரமாக ரத்துசெய்ய வேண்டும் - பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,
“மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை ஆரம்ப காலத்தில் இருந்தே தொடர்ந்து எதிர்த்து வந்தவர் ஜெயலலிதா என்பதை நீங்கள் அறிவீர்கள். 2011-ஆம் ஆண்டு இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்த அப்போதைய மத்திய அரசு முடிவு எடுத்தபோது, அப்போதைய தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா தனது கடுமையான ஆட்சேபனையை கடிதம் வாயிலாக அப்போதைய பிரதமருக்கு தெரிவித்தார். பின்னர், 2012-ஆம் ஆண்டு மத்திய அரசால் அரசாணை வெளியிடப்பட்டபோது, தனது கடுமையான எதிர்ப்பினை அவர் பதிவு செய்ததோடு, தன் இறுதி மூச்சுவரை அதே நிலைப்பாட்டில் இருந்தார். 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்கல்வி படிப்புகளில் சேர்க்கையை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான சட்டத்தை இயற்றியது உள்பட, மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்துவதற்காக 2005-ஆம் ஆண்டு முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவர் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் வழியை பின்பற்றி, 2017-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ சேர்க்கை அமையும் வகையில் இரண்டு சட்டமுன்வரைவுகள், அதாவது 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவ அறிவியல் இளநிலை மற்றும் பல் மருத்துவ இளநிலைப் படிப்புகள் சேர்க்கைக்கான சட்டமுன்வரைவு மற்றும் 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்தில் முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்ட முன்வடிவு ஆகியவை ஒருமனதமாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக அது பலனளிக்கவில்லை. தற்போது தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் கலந்துகொள்வதில் இருக்கும் சங்கடங்களை சுட்டிக்காட்டுகிறேன்.
நுழைவுத்தேர்வுக்கான வினாக்கள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களை அடிப்படையாக கொண்டிருப்பதால், மாநில அரசால் 12-ஆம் வகுப்புக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களில் பயின்றவர்கள் நீட் தேர்வில் போட்டியிடுவது சமபலம் வாய்ந்த களமாக இருக்காது என்பதால், நீட் தேர்வை எழுதுவதற்கு தனியாக பயிற்சி எடுக்கவேண்டியது மிக அவசியம்.
இந்த நுழைவுத்தேர்வுகளில் ஊரகப்பகுதி மாணவர்கள் மற்றும் பின்தங்கிய சமூகப் பொருளாதார பின்னணியை கொண்ட மாணவர்கள், நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியிட முடியாது. இதற்கு காரணம் அந்தப் பகுதிகளில் தேவையான பயிற்சி நிலையங்கள் இல்லாததும், குறித்த நேரத்தில் அதற்கு தேவையான புத்தகங்களை பெறமுடியாததும்தான்.
போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ள பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்தமுடியாத நிலை ஊரகப்பகுதி மாணவர்களிடம் காணப்படுகிறது. நீட் தேர்வு ரத்துசெய்யப்பட்டு, அரசு மருத்துவ கல்லூரிகளில் ஊரகப்பகுதி மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும்பட்சத்தில், ஊரகப்பகுதிகளில் நிலவும் மருத்துவர்களின் பற்றாக்குறை ஓரளவுக்கு குறைக்கப்படும். 12 பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை மருத்துவ கல்லூரிகளில் நடைபெற்றபோது, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் குறிப்பாக ஏழை மாணவர்கள் அதிகம் இருந்தனர். ஆனால், நீட் தேர்வுக்கு பிறகு விளிம்பு நிலை மாணவர்கள் மருத்துவப்படிப்பில் நுழைவது கடினமாகிவிட்டது.
இதுபோன்று மேற்கூறிய கருத்துக்களின் அடிப்படையில், மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மட்டுமில்லாமல் அனைத்து கல்லூரி படிப்புகளுக்குமான நுழைவுத்தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யும் வகையில், ஒரு கொள்கை முடிவை எடுக்க வேண்டும். மேலும், மேல்நிலைப்பள்ளி இறுதித்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் அனைத்து படிப்புகளுக்கும் மாணவ, மாணவியர் சேர்க்கையை மேற்கொள்ள மாநிலங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.