காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார்..!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தியின் உடல், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84. மறைந்த திண்டிவனம் ராமமூர்த்தியின் உடல் சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் மரியாதை செலுத்திட வைக்கப்பட்டு உள்ளது.
திண்டிவனம் ராமமூர்த்தி 1981 முதல் 84ம் ஆண்டு வரையில் தமிழக எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 1984 முதல் 1990 வரை மாநிலங்களவையில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக இருந்தவர். 2011 சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்தார் திண்டிவனம் ராமமூர்த்தி. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.
2011 சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்தார் திண்டிவனம் ராமமூர்த்தி. இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். ஆனால் சில மாதத்தி்ல் தனது தனிக் கட்சியை கலைத்துவிட்டு சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவருக்கு தமிழக பிரிவின் தலைவர் பதவியைத் தந்தார் பவார். அடுத்த சில மாதங்களிலேயே ராமமூர்த்தி தலைமையிலான கமிட்டியே கலைக்கப்பட்டு விட்டதாக அந்த கட்சியின் அகில இந்திய கமிட்டி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் அரசியலில் பெரிய அளவில் ஈடுபாடு இல்லாமல் ஒதுங்கியே இருந்தார் திண்டிவனம் ராமமூர்த்தி. எம்.எல்.ஏவாகவும், எம்.பியாகவும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் பல ஆண்டுகாலம் அரசியலில் இருந்த திண்டிவனம் ராமமூர்த்தியின் மறைவுக்கு இந்நாள் மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அரசியல் தலைவர்கள் இரங்கல்:
கே.எஸ்.அழகிரி : திண்டிவனம் ராமமூர்த்தி காலமான செய்தி கேட்டு துயரமடைந்தேன்; பின்தங்கிய சமுதாய மக்களின் நலன்களை பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்பட்டவர், அவரை இழந்து வாடும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்”
மருத்துவர் ராமதாஸ் : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் இராமமூர்த்தி உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்ட திரு. இராமமூர்த்தி அவர்கள், அக்கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் உழைத்தார். 1990-களின் பிற்பகுதியில், காங்கிரசிலிருந்து மூப்பனார் பிரிந்து சென்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியதால், காங்கிரஸ் வலுவிழந்து இருந்த நிலையில் அக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று சிறப்பாக வழிநடத்தினார். காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்தவர். தாம் வகித்த பதவிகள் அனைத்துக்கும் நேர்மையாக இருந்து சிறப்பு சேர்த்தவர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்தால் கட்சிகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடனும் தொடர்பு வைத்திருந்தவர். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளை பாராட்டியவர். தனிப்பட்ட முறையில் என் மீது அன்பும், மரியாதையும் கொண்டிருந்தவர். திண்டிவனம் வரும் போதெல்லாம் என்னை சந்தித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். அவர் மீது எனக்கும் அன்பும், மரியாதையும் உண்டு.
திண்டிவனம் இராமமூர்த்தி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காமராஜர் காலமான பொழுது மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்யும்படி வாதாடியவர் திண்டிவனம் ராமமூர்த்தி :
இந்திய தேசிய காங்கிரசின் அகில இந்தியத் தலைவராக பல ஆண்டுகளும் 1954ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டுவரை முதல்வராகவும் இருந்த காமராஜர் இந்தியாவில் நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது 1975ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காலமானார்.
அந்தத் தருணத்தில் தமிழக முதல்வராக மு. கருணாநிதி பதவி வகித்தார். காமராஜரின் இறுதிச் சடங்குகள் நடப்பதற்கான இடம் எப்படி தேர்வுசெய்யப்பட்டது என்பதை தனது பார்வையில் மு. கருணாநிதி தன் வாழ்க்கை வரலாற்று நூலான நெஞ்சுக்கு நீதியில் கருணாநிதி பதிவுசெய்திருக்கிறார்.
“தமிழகத்திலே உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் காமராஜரின் உடலை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைத்து அங்கேயே அடக்கம் செய்ய முடிவு எடுத்தனர். அந்தச் செய்தி என் காதிலே விழுந்ததும் நான் அந்தக் கருத்தை மறுத்து தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போதிலும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அரசு மரியாதையுடன் தான் அடக்கம் செய்ய வேண்டுமென்றும் பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி மண்டபத்திலேயே தான் வைக்க வேண்டுமென்றும் கூறினேன். அதிகாரிகளை அழைத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி கூறிவிட்டு, உடனடியாக காமராஜரின் உடலை ராஜாஜி மண்டபத்திற்கு எடுத்துச் சென்று பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன்” என்று நெஞ்சுக்கு நீதியின் இரண்டாம் பாகத்தில் கருணாநிதி பதிவு செய்திருக்கிறார்.
மேலும், "காமராஜர் உடலை எங்கே அடக்கம் செய்வது என்ற கேள்வி எழுந்தபோது கிண்டியில் காந்தி மண்டபத்திற்கு பக்கத்தில் ராஜாஜி நினைவகம் அருகில் அடக்கம் செய்யலாம் என்ற கருத்தினை நான் தெரிவித்தேன். அப்போது இரவு மணி எட்டாகிவிட்டது. மழை வேறு. இருந்த போதிலும் நானே எந்த இடத்தில் அடக்கம் செய்யலாம் என்று பார்ப்பதற்காக கிண்டிக்குச் சென்றேன். என்னுடன் பேராசிரியர், ப.உ. சண்முகம், மேலவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராஜாராம் நாயுடு, திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோர் உடன் வந்தனர். கிண்டிக்குச் சென்று அங்கே இருட்டில், காரைத் திருப்பி கார் வெளிச்சத்திலேயே இடத்தைப் பார்வையிட்டுத் தேர்ந்தெடுத்தோம்" என்றும் கருணாநிதி அந்த நூலில் கூறியிருக்கிறார்.