(Source: ECI/ABP News/ABP Majha)
Kutralam Falls: குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..
குற்றால அருவிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் வனத்துறையினர் குளிக்க தடை விதித்துள்ளனர்.
குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்குவது குற்றாலம். ஆண்டுதோறு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதம் குற்றால சீசன் தொடங்கும். இதற்காக தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகை தருவார்கள். உற்சாகத்துடன் மக்கள் குற்றாளத்தில் இருக்கும் அருவிகளில் குளித்து செல்வார்கள். மெயின் அருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி, ஐந்தருவி, சென்பக அருவி ஆகியவை முக்கிய அருவிகளாகும்.
ஜுன் மாதம் 8 ஆம் தேதி கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதனால் கடந்த சில நாட்களாக கேரளாவில் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக தென்காசி மாவட்டம் குற்றலாத்தில் இருக்கும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வனத்துறை அதிகாரிகள் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் குளிக்க தடை விதித்துள்ளனர்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு கன மழை முதல் மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. அதேபோல் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
05.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
06.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.