வெள்ள பாதிப்பு: ‛மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்போம்...’ -அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்!
வெள்ள பாதிப்புக்கு கூடுதல் நிவாரணம் மத்திய அரசிடம் கேட்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு பரவலாக மழை பெய்தது. பல மாவட்டங்களில் கனமழையும் பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளில் மழை நீர் புகுந்தது. மக்கள் கடும் அவதியுற்றனர். இன்னமும் பல பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து மழை நீரை வெளியேற்றும் பணியில் மீட்பு படையினர் மும்முரமாக இருக்கின்றனர். இச்சூழலில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பார்வையிட்டுவருகிறார். அதன்படி சென்னையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் டெல்டா மாவட்டங்களிலும் பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசிடம் நிவாரணம் கேட்கப்படுமென அறிவித்திருந்தார். அதன்படி, சில நாள்களுக்கு முன்பு நிவாரணம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு சந்தித்து பேசினார். டெல்லியில் நிகழ்ந்த இந்த சந்திப்பில் தமிழ்நாட்டிற்கு ரூ.2,079 கோடியை மழை வெள்ள நிவாரணமாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்தியக் குழு இரு குழுக்களாக பிரிந்து 22ஆம் தேதியில் இருந்து இரு நாள்கள் ஆய்வு செய்ய உள்ளது. கனமழை பெய்து அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கூடுதல் நிவாரண நிதி கேட்கப்படும். சுமார் 2 ஆயிரத்து 629 கோடி ரூபாய் மழை வெள்ள நிவாரண நிதி வழங்கவேண்டும்” என்றார்.
முன்னதாக மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துவிட்டு 17ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி டி.ஆர். பாலு, “மழை நிவாரணமாக உடனடியாக சுமார் 550 கோடி ரூபாய் வழங்க கோரிக்கை வைத்துள்ளோம். மொத்தமாக வெள்ள நிவாரண நிதியாக 2,629 கோடி ரூபாயைத் தமிழக அரசு கேட்டுள்ளது” என கூறியிருந்தார்.
அதுமட்டுமின்றி, அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20000 நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: கரூர் சிறுமி தற்கொலை விவகாரம்: புகாரை விசாரிக்காத இன்ஸ்பெக்டர் ‛வெயிட்டிங் லிஸ்ட்’