உயர்கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை செயலர் உள்பட 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
உயர்கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை செயலாளர்கள் உள்பட 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழகத்தில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சட்டபை தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. தலைமையிலான புதிய அரசு அமைந்தது முதல், தமிழகத்தில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் தொடர்ந்து பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். தலைமை செயலாளர் முதல் பல துறைகளின் செயலாளர்கள் உள்பட பலரும் மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழக தலைமை செயலாளர் வெ. இறையன்பு இன்று பிறப்பித்த உத்தரவில், “மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவரான ஷிவ்தாஸ் மேனன் ஐ.ஏ.எஸ்., பணியிடம் மாற்றப்பட்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறையின் கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறையின் செயலாளரான தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த பொறுப்பை வகித்து வந்த கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் தலைமை செயலாளரும், போக்குவரத்து கழக ஆணையருமான டி.எஸ். ஜவஹர் ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு கால்நடை,மீன்வளத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை முதன்மை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு சர்க்கரை உற்பத்தி துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறையின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டுள்ள கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். கடந்த இரு தினங்களுக்கு முன்னதாகதான் அந்த பொறுப்பில் புதியதாக நியமிக்கப்பட்டு இருந்தார். அதேபோல, உயர்கல்வித்துறை செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடம் மாற்றி தமிழக தலைமை செயலாளர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், அவர்களில் சிலரை இரண்டே நாட்களில் பணியிடம் மாற்றம் செய்து இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
2018-ஆம் ஆண்டு கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். நெடுஞ்சாலைத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். அப்போது, அவரது நியமனத்தை எதிர்த்து அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் முகநூலில் எதிர்ப்பு தெரிவித்து இருந்ததாகவும், இந்த நிலையில் அதே கார்த்திகேயனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மீண்டும் நெடுஞ்சாலைத்துறை ஆணையராக நியமிப்பது ஏன்? என்று அறப்போர் இயக்கத்தினர் கார்த்திகேயனின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த சூழலில், நெடுஞ்சாலைத்துறை பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இன்று காலை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் உள்பட 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.