PTR on Unemployment: அரசுப்பணியில் வெளிமாநிலத்தவர்: ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் எதன் அடிப்படையில் அரசுப்பணிகளில் வெளிமாநிலத்தவருக்கு வேலை வழங்கப்பட்டது என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கபடும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார்
கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் தமிழர்களை தவிர மற்ற மாநிலத்தவர்களுக்கு எந்த அடிப்படையில் வேலை தரப்பட்டது என்பது பற்றி விரிவான ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்
16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரை மீதான விவாதம் தமிழ்நாடு சட்டபேரவையில் தொடங்கி நடந்து வரும் நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும் பண்ரூட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன், கடந்த காலங்களில் தமிழ் தெரியாதவர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வானையம் (TNPSC) நடத்திய தேர்வுகளில் அதிகப்படியானோர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கொண்டுத்தவர்களை தவிர்த்துவிட்டு வெளிமாநிலத்தவர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்படுவதாகவும் எதிர்காலத்தில் டிஎன்பிஎஸ்சி மற்றும் மத்திய அரசு பணிகளில் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே பணியாற்றுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டிருந்தார்.
வேல்முருகனின் இந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தில் கடந்த காலங்களில் எதன் அடிப்படையில் தமிழர் அல்லாத வெளிமாநிலத்தவருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார், வெளிமாநிலத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக எத்தகைய நடைமுறைகள் எல்லாம் மாற்றப்பட்டது என்பதும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று கூறிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், வரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் உறுதி அளித்துள்ளார் மேலும் வெளிமாநிலத்தவர்கள் எங்கெல்லாம் விதிமுறையை மீறி சேர்ந்திருக்கிறார்கள் என்ற ஆவணங்களை கொடுக்கும் பட்சத்தில் அதுகுறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தது. வருங்காலங்களில் இது போன்ற தவறுகள் நடைபெறாது எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப்பணிகளான வருமானவரி, வங்கி, ரயில்வே, நிலக்கரி சுரங்கப்பணிகள், துறைமுகப்பணிகள் உள்ளிட்ட பணிகளிலும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுப்பணிகள், மின்சார வாரியம் உள்ளிட்ட பணிகளிலும் தமிழர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வெளிமாநிலத்தவர்கள் திட்டமிட்டு பணியமர்த்தப்படுவதாகவும் தமிழில் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழே தெரியாத நபர்கள் எப்படி தேர்ச்சி பெற்று பணிகளை பெற்றிருக்க முடியும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தொடர்ந்து கேள்வி எழுப்பியும், குற்றம்சாட்டியும் வந்த நிலையில் இப்பிரச்னை தற்போது அரசின் கவனத்திற்கு சட்டபேரவை விவாதம் வாயிலாக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது