Fact Check: தெரு நாய் கடித்தால், உணவு அளிப்போருக்கு அபராதமா? : உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?
தெரு நாய்களைக் குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருந்து அகற்றினாலும், அதே பகுதிகளுக்கு சில வாரங்களில் வேறு நாய்கள் வந்துவிடும்.
தெரு நாய்களுக்கு யாரையாவது கடித்தால், அவற்றுக்கு உணவளிக்கும் நபர்கள்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். அதேபோல கடிபட்டவர்களுக்கான மருத்துவச் செலவுகளையும், பராமரிப்புச் செலவுகளையும் ஏற்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
இதனால் தெரு நாய்களுக்குத் தொடர்ந்து உணவளிக்கும் தனியார் தன்னார்வ அமைப்புகள் அதிர்ச்சியில் ஆழ்ந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவு உண்மையா என்று கேள்வி எழுந்துள்ளது.
பின்னணி என்ன?
கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் தொல்லை கடுமையாக அதிகரித்துவிட்டதாகவும் அதைக் கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரி வழக்கறிஞர் வி.கே.பிஜூ என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ''கேரளாவில் நாய்க் கடி பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இதுவரை மட்டும் 8 பேர் பலியாகி உள்ளனர். அண்மையில்கூட கேரளாவில், ரன்னியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி, நாய்க்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டு கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழக்கவும் நேர்ந்தது. எனவே, தெரு நாய்களின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
வளர்ப்பு நாய் கடித்த வீடியோ
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகளிடம் உத்தரப்பிரதேச மாநிலத்தில், லிஃப்ட்டில் சிறுவனை வளர்ப்பு நாய் கடித்த வீடியோ காண்பிக்கப்பட்டது.
அப்போது, நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறும்போது, ''நான் கூட நாய்களை அதிகம் விரும்புவேன். ஆனால் வளர்ப்பு நாய்கள், பொது மக்களில் யாரையாவது கடித்தால், அதை வளர்ப்போர்தான் அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும். கடிபட்டவர்கள் சிகிச்சை பெறும் செலவையும், பராமரிப்புச் செலவையும் ஏற்கவேண்டும் என்று ஏன் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது? இந்த வழக்கில் வரும் 28-ம் தேதி அன்று இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கிறோம்'' என்று தெரிவித்தார்.
எனினும் தெரு நாய்களுக்கு யாரையாவது கடித்தால், அவற்றுக்கு உணவளிக்கும் நபர்கள்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற செய்தி ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா ABP நாடுவிடம் வருத்தத்துடன் பேசினார்.
''மிருகங்கள் மீது சக மனிதர்கள் அக்கறைகொள்ள வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு சாசனமே சொல்லி உள்ளது. உச்ச நீதிமன்றமே சொல்லாத ஒன்றை, சிலர் தவறாகப் பரப்பியுள்ளனர். சில ஊடகங்களும் இல்லாத செய்தியை அளித்துள்ளன. இது வேதனை அளிக்கிறது.
நன்மை செய்யும் தெரு நாய்கள்
தெருவில் உள்ள நாய்களுக்கு உணவு அளிப்பதால், தெருக்களில் பெரும்பாலும் திருட்டு பயம் இருப்பதில்லை. எலி, பூனைத் தொல்லை இருப்பதில்லை. எலிகளால் வரும் நோய்களை நாம் அனைவருமே அறிந்திருக்கிறோம். அதேபோல நாய்கள் தெருக்களில் கொட்டப்படும் மட்கும் குப்பைகளை உட்கொண்டு, குப்பைகளைக் கட்டுப்படுத்துகின்றன.
தெரு நாய்களைக் குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருந்து அகற்றினாலும், அதே பகுதிகளுக்கு சில வாரங்களில் வேறு நாய்கள் வந்துவிடும். புதிதாக வரும் நாய்கள், ஆக்ரோஷமாக இருக்க வாய்ப்புண்டு.
என்னதான் தீர்வு?
தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவதில் அரசுத் துறைகளும் தன்னார்வ அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும். தெரு நாய்களுக்கு முழுமையாகக் கருத்தடை செய்துவிட வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
தன்னார்வ விலங்குகள் நல அமைப்புகள் இயங்க ஏற்கெனவே போதிய உதவி கிடைப்பதில்லை. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் சொல்லாத ஒன்றை, செய்தியாக்கிப் பரப்புவதை அனைவரும் தவிர்க்க வேண்டும்'' என்று விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற அறிக்கையைக் காண: