(Source: ECI/ABP News/ABP Majha)
’’வருங்கால பிரதமர் திருமாவளவன் வாழ்க’’... கரூரில் கவனம் பெற்று வரும் சிறுத்தைகளின் போஸ்டர்...!
'’கட்சித் தலைவர்களை புகழும் வண்ணம் வித்தியாசமான முறையில் போஸ்டர்களை ஒட்டி கட்சித் தலைமையிடம் ஸ்கோர் வாங்குவது என்பது தற்போது கரூர் மாவட்ட அரசியலில் ட்ரண்டாகி வருகிறது’’
கரூர் பேருந்து நிலையம் மனோகரா கார்னர் அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் 59ஆவது பிறந்த நாளானது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கரூர் மேற்கு நகர செயலாளர் முரளி தலைமையில் கொண்டாடப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பினருமான திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக கரூர் நகரின் பல்வேறு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் ’’வருங்கால பிரதமரே வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்’’ என எழுதப்பட்டிருந்தது. பட்டாசுகள் வெடித்தும் 10 கிலோ கேக்கை நிர்வாகிகள் மத்தியில் வெட்டியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், "வருங்கால பிரதமர் வாழ்க" "எங்களின் முதல்வர் வாழ்க" என்றும் கோஷங்களை எழுப்பினர்.
கரூர் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் நேற்று இரவு வருங்கால பிரதமர் வாழ்க என்ற சுவரொட்டிகள் பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகின்றன. கட்சித் தலைவர்களை புகழும் வண்ணம் வித்தியாசமான வார்த்தைகளை கோர்த்து போஸ்டர்களை ஒட்டி கட்சித் தலைமையிடம் ஸ்கோர் வாங்குவது என்பது தற்போது கரூர் மாவட்ட அரசியலில் ட்ரண்டாகி வருகிறது. முன்னதாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற பின் கரூர் வந்த அண்ணாமலைக்கு வரவேற்பு அளித்த பாஜக நிர்வாகிகள், இன்றைய பாஜக மாநிலத் தலைவர், நாளைய தமிழகத்தின் முதல்வர் என்ற வாசகம் அடங்கிய போஸ்டரை ஒட்டி தலைமையிடம் ஸ்கோர் வாங்கினர். இதனை தற்போது பாஜக மட்டுமின்றி வேறு சில கட்சியினரும் பின்பற்றத் தொடங்கி உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
இந்த நிலையில் இன்று விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாளையொட்டி கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் சமூகவலைதளங்கில் பதிவிடப்பட்டு விவாதப்பொருளாகி உள்ளது. விடுதலை சிறுத்தைகள் ஒட்டி உள்ள இந்த போஸ்டர் குறித்து பலர் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் தங்களது கருத்துகளை வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கரூர் லைட் ரோஸ் கார்னர் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியின் கொடியை ஏற்றி வைத்து கூடியிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிய பின்னர், வெள்ளியணையில் உள்ள ராகவேந்திரா அறக்கட்டளையில் வசிக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவை வழங்கி திருமாவளவனின் பிறந்தநாள் கொண்டாத்தை கரூர் விடுதலை கட்சி நிர்வாகிகள் நிறைவு செய்தனர். ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி கட்சித் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை ஆதரவற்றோர் அறக்கட்டளை நிர்வாகிகள் பாராட்டி உள்ளனர்.