தொடரும் சோதனை... மாறி மாறி படையெடுக்கும் முன்னாள் அமைச்சர்கள்... விடாப்படியாக நிற்கும் போலீஸ்!
ஸ்டாலின் அவர் தந்தை கருணாநிதிக்கு ஒருபடி மேலே சென்று பழிவாங்கும் போக்கை கடைபிடிக்கிறார். அதிமுகவின் முன்னணி தலைவர்களை வழக்குகள் தொடர்ந்து அழித்து விடலாம் என இந்த அரசு தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முன்னதாக விஜயபாஸ்கர் வீட்டுக்கு சி.வி.சண்முகமும், எஸ்.பி.வேலுமணி வீட்டுக்கு ஜெயக்குமாரும் முன்னதாக வந்தனர். ஆனால் அவர்களை போலீஸ் தடுத்து நிறுத்தினர். போலீசாருடன் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் தனித்தனியாக வாக்குவாதம் செய்தனர்.
அப்போது பேசிய சி.வி.சண்முகம், “இந்த சோதனை முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை. ஏற்கெனவே 2 முறை சோதனை நடத்தி எந்த ஆவணமும் தாக்கல் செய்ய முடியாத நிலையில், இன்று புதிய வழக்குகள் மூலம் சோதனை என்ற பெயரில் இந்த அரசு எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கி அழிக்கலாம் என நினைக்கிறது.
View this post on Instagram
ஆளத் தெரியாத முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் அவர் தந்தை கருணாநிதிக்கு ஒருபடி மேலே சென்று பழிவாங்கும் போக்கை கடைபிடிக்கிறார். அதிமுகவின் முன்னணி தலைவர்களை வழக்குகள் தொடர்ந்து அழித்து விடலாம் என இந்த அரசு தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறது.
மக்களுக்கு கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற திறனில்லாத அரசாக திமுக அரசு உள்ளது. ஜெயலலிதாவின் அரசில் எடப்பாடி பழனிசாமியால் பல்வேறு ஏழை, எளிய பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகளை திமுக அரசு நிறுத்தியுள்ளது.
குறிப்பாக பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை இந்த அரசு ரத்து செய்திருக்கிறது. இன்னும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க திராணியில்லை. அவர்களது அமைச்சர் உதயநிதியின் ரசிகர் மன்றத்துடன் தியேட்டர்களுக்கு சென்று டிக்கெட் விற்று கொண்டிருக்கிறார்.
விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. சொத்து வரி 150 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டு வந்த மக்களை மேலும் சோதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
பால் விலை, மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாமாதம் மின் கட்டணத்தை கணக்கெடுப்போம் என்று சொல்லிவிட்டு இரண்டு மடங்காக விலையை உயர்த்தியுள்ளனர். பேருந்து கட்டணம் உயர்வு என்ற மகிழ்ச்சியான செய்தியை சில நாள்களில் சொல்வார்கள்.
கோவையில் வேலுமணி மீது ஏன் வழக்கு போடுகிறார்கள்? கோவையில் ஒருங்கிணைந்த பேருந்த நிலையம் அமைக்க இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு எங்கள் ஆட்சியில் கிட்டதட்ட 70 கோடி ரூபாய்க்கு பணிகள் முடிவடைந்து விட்டன, ஆனால் ஆட்சி மாற்றத்தின் பிறகு வேறு இடத்துக்கு பேருந்து நிலையத்தை மாற்றப் போவதாக அறிவிக்கிறார்கள்.
நவீன முறையில் ஒரு குடும்பம் நாட்டை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவை ஆடம்பர திருமணம் நடத்தி வைத்தார் என்று சொன்னார்கள் ஆனால் இன்று மதுரையில் 2000 ஆடுகளை வெட்டி, 25 பணம் எண்ணும் மெஷின் கொண்டு பணம் எண்ணி மொய் வசூலிக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் முன்னதாகப் பேசிய ஜெயக்குமார், ”முதலமைச்சர் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அதிமுகவை ஒழித்துக் கட்டும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். எதிர்க் கட்சிகள் செயல்படாமல் இருக்க காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்துகின்றனர். மின்சார கட்டண உயர்வை திசை திருப்பவே இந்த ரெய்டு நடத்தப்படுகிறது” என்றார்.