EVKS Elangovan Health: ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா பாதிப்பு.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சைபிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உயிரிழந்ததையடுத்து அந்த சட்டமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சி, காங்கிரஸ் தரப்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் நடந்தது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகள் பெற்று, சுமார் 60 ஆயிரத்திற்கு மேலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரம்மாண்டமாக வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கடந்த 10ஆம் தேதி தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஈவிகேஎஸ் இளங்கோவன் பதவியேற்றதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பதவியேற்று 5வது நாளில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மார்ச் 15ஆம் தேதி அவருக்கு லேசான நெஞ்சு வலியின் காரணமாக போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து இன்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற உடனே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது.