Etharkkum Thunindhavan: எதிர்ப்புகளை மீறி கடலூரில் வெளியான எதற்கும் துணிந்தவன் - திரையரங்குகளில் போலீஸ் குவிப்பு
பாமக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின் காரணமாக பெரும்பாலான திரையரங்குகளில் காலை நான்கு மணி அளவில் திரையிடப்படும் முதல் ரசிகர் ஷோ இன்றி ஏழு மணிக்கு பிறகு திரைப்படம் முதல் காட்சி திரையிடப்பட்டது
நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பா.ம.க. மாணவர் சங்க மாநில செயலாளர் விஜயவர்மன் மற்றும் நிர்வாகிகள் கடலூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் திரைப்பட நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில், மாற்று சமுதாயத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிசாமியை குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் வன்னியராக சித்தரிக்கப்பட்டுள்ளது. சகோதரத்துவமாக உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் சாதி வன்முறையை தூண்டும் வகையில் அந்த திரைப்படம் வெளிவந்தது.
இதற்காக வன்னிய மக்களிடம் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காதவரை அவர் நடிக்கும் திரைப்படங்களை கடலூர் மாவட்டத்தில் திரையிடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம், என கூறப்பட்டிருந்த நிலையில், இன்று கடலூரில் சூர்யா ரசிகர்கள் படம் வெளியிடுவதை கொண்டாட பேனர், பேண்டு என தயார் செய்து இருந்த நிலையில் காவல் துறையினர் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தனர். இதன் காரணமாக எப்பொழுதும் கொண்டாட்டங்களுடன் காணப்படும் திரையரங்குகள் களையிழந்து காணப்பட்டன. பின்னர் காலை 7 மணிக்கு படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டன. இதற்கு முன்னதாக இருந்த காவலர்கள் திரையரங்குகளில் கூடி இருந்த ரசிகர்களை வரிசை படுத்தி அவர்களின் பெயரை எழுதிக்கொண்டு, முழுவதுமாக பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுப்பட்ட பின்னரே படம் திரையரங்கில் திரையிடப்பட்டது.
இதே போல் கடலூரில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காவல்துறையினரை பாதுகாப்புடன் திரைப்படம் திரையிடப்பட்டது, மேலும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இதே போல் காவல் துறையினர் பாதுகாப்புடன் காலை திரைப்படம் திரையிடப்பட்டது. ஆனால் புவனகிரி நெய்வேலி குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் இன்று படம் வெளியாகவில்லை. இதனால் காலையில் திரையரங்குகளுக்கு வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாமக சார்பில் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட கூடாது என மனு அளிக்கப்பட்ட நிலையில் இன்று எந்த பிரச்சனைகளும் இன்றி திரைப்படம் வெளியாகி உள்ளது. இருப்பினும் திரையரங்குகளில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும் அனைத்து திரையரங்குகளிலும் காவல் துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர், மேலும் பாமக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின் காரணமாக பெரும்பாலான திரையரங்குகளில் காலை நான்கு மணி அளவில் திரையிடப்படும் முதல் ரசிகர் ஷோ இன்றி ஏழு மணிக்கு பிறகு திரைப்படம் முதல் காட்சி திரையிடப்பட்டது.