Erode Palani Rail: 20 ஆண்டுகால கனவு.. ஈரோடு - பழனி இடையே புதிய ரயில் பாதை.. எப்போது தொடங்குகிறது பணிகள்?
ஈரோடு - பழனி இடையேயான புதிய ரயில் பாதையை அமைக்க 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து சென்னிமலை, காங்கேயம், பெருந்துறை, தாராபுரம், தொப்பம்பட்டி வழியாக பழநியை வந்தடையும் வகையில் அமைக்க ரயில் பாதை முடிவு செய்யப்பட்டது.

New Railway line: 20 ஆண்டுகளுக்கு மேல் தாமதிக்கப்பட்டு வந்த ஈரோடு - பழனி இடையேயான புதிய ரயில் பாதையை அமைக்க 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை தவிர, மகாபலிபுரம் வழியாக சென்னை - கடலூர் இடையேயான புதிய ரயில் பாதையை அமைக்க 52.1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அருப்புக்கோட்டை வழியாக மதுரை - தூத்துக்குடி இடையேயான புதிய ரயில் பாதைக்கு 55.2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
வருகிறது புதிய ரயில் பாதைகள் - New Railway Projects
புதிய ரயில் பாதைகளை அமைக்கவும், ஒரு வழி ரயில் பாதையை இரு வழி ரயில் பாதையாக மாற்றவும் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என மத்திய பாஜக அரசு மீது தமிழக அரசு தொடர் குற்றச்சாட்டு சுமத்தி வருகிறது. தங்களின் ஊர்களில் புதிய ரயில் பாதைகளை அமைக்க ரயில்வே நிதி ஒதுக்குவதில்லை என பொது மக்களும் புகார் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த நிதியாண்டை விட 2025-26 நிதியாண்டில் தமிழ்நாட்டுக்கு இந்தியன் ரயில்வே அதிக நிதி ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டுக்கு இந்தாண்டு மொத்தமாக 6,626 கோடி ரூபாய் ரயில்வே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 612.8 கோடி ரூபாய் 8 புதிய ரயில் பாதைகளை அமைக்க பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, பழனி ரயில் பாதை - Erode Palani New Railway line
குறிப்பாக, 20 ஆண்டுகளுக்கு மேல் தாமதமாகி வந்த ஈரோடு - பழனி இடையேயான புதிய ரயில் பாதையை அமைக்க 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையை கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இறுதியாக, ஈரோட்டில் இருந்து சென்னிமலை, காங்கேயம், பெருந்துறை, தாராபுரம், தொப்பம்பட்டி வழியாக பழநியை வந்தடையும் வகையில் அமைக்க ரயில் பாதை முடிவு செய்யப்பட்டது.
இதை தவிர, ஆந்திரப் பிரதேசம் மாநிலம் நகரியில் இருந்து திண்டிவனம் வரையிலான புதிய ரயில் பாதை திட்டத்திற்கு 95% நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, ரூ. 347 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் சித்தூர் மாவட்டம் முழுவதும் இணைக்கும் வகையில் இந்த ரயில் பாதை திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், இந்த திட்டம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
RTI மூலம் கிடைத்த தகவல்கள்:
காட்பாடியில் இருந்து விழுப்புரம் (160 கி.மீ) வரையிலான ரயில் பாதைக்கு ரூ. 200 கோடியும், சேலம் - கரூர் - திண்டுக்கல் (160 கி.மீ) மற்றும் ஈரோடு - கரூர் (65 கி.மீ) ரயில் பாதைகளுக்கு தலா ரூ.100 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நிதி பற்றாக்குறையால் கடந்த ஆண்டு நிலம் கையகப்படுத்தும் தொடங்கப்படாமல் இருந்த மதுரை - தூத்துக்குடி (அருப்புக்கோட்டை வழியாக) ரயில் பாதை திட்டத்திற்கு (143.5 கி.மீ) ரூ. 55.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மகாபலிபுரம் வழியாக சென்னை - கடலூர் இடையேயான புதிய ரயில் பாதையை அமைக்க 52.1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
எந்த ரயில் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பது தொடர்பான விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கீழ் பெற்றுள்ளார் சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன். இதுகுறித்து அவர் பேசுகையில், "உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான பட்ஜெட்டை அதிகரிப்பது ரயில்வேயின் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். பல ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் புதிய பாதைத் திட்டங்கள் தொடங்கத் தவறிவிட்டன.
பழனி - ஈரோடு மற்றும் சென்னை-கடலூர் போன்ற வழித்தடங்களுக்கு இப்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கலாம். இருப்பினும், வரும் ஆண்டுகளில் ரயில்வே அதிக நிதியை ஒதுக்க வேண்டும்" என்றார்.





















