AIADMK: அதிமுகவின் பொதுச்செயலாளரானார் இபிஎஸ்; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த இரண்டு மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த இரண்டு மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே பொதுச்செயலாளருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி தற்போது போட்டியின்றி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர்களான பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வழங்கினர். இதனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது. அதிமுக தலைமை கழகத்தில் ஏராளமானோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தனர். முன்னதாக அங்கிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ”அனைத்திந்திய அதிமுக தொண்டர்களால் கழக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். அதற்காக அதிமுகவின் அனைத்து தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முடிவை அறிவித்து விட்டார்கள். அந்த தருணத்தில் இருந்து நான் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்” என தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு, பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு என கிட்டதட்ட 9 மாதங்களாக எதிர்பார்த்து காத்திருந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.