அமலாக்கத்துறை சோதனை எதிரொலி - கரூரில் 2வது நாளாக மணல் அள்ளும் பணிகள் நிறுத்தம்
கரூர் வாங்கலை அடுத்த மல்லம்பாளையம் கிராமத்தில் செயல்படும் மணல் குவாரியில் மணல் அள்ளும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. 2வது நாளாக மணல் குவாரிகள் செயல்படாமல் 3 நாட்கள் விடுமுறைஅறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை சோதனை எதிரொலியாக கரூரில் 2வது நாளாக மணல் அள்ளும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. லாரிகள் நிறுத்தும் இடத்தில் மூன்று நாள் விடுமுறை என பலகை வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவர்களது தொடர்புடைய இடங்களிலும், மணல் குவாரிகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம், வாங்கலை அடுத்த மல்லம்பாளையம் கிராமத்தில் செயல்படும் மணல் குவாரியில் மணல் அள்ளும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. 2வது நாளாக மணல் குவாரிகள் செயல்படாமல் 3 நாட்கள் விடுமுறை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதனால் செம்மடை அருகில் உள்ள லாரிகள் நிறுத்தும் இடத்தில் நூற்றுக்கணக்கான வெளியூர் லாரிகள் காத்து கிடக்கின்றன. மேலும், மண்மங்கலம் அருகில் உள்ள மணல் லாரிகளுக்கு டோக்கன் வழங்கும் இடத்தில் ஆற்றிலிருந்து மணல் சேமிப்பு கிடங்கிற்கு மணல் எடுத்து வரும் சுமார் 30 லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை சோதனையின் ஒரு கட்டமாக கரூரில் மணல் குவாரிகள் செயல்படவில்லை. இதனால் கரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும், நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் மணல் எடுத்துச் செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.