சமூக வலைதளத்தில் புகார் : இயக்குனர் தங்கர்பச்சான் வீட்டிற்கு நேரில் சென்ற மின்வாரிய அதிகாரிகள்..
சமூக வலைதளத்தில் இயக்குனர் தங்கர்பச்சான் அளித்த புகாரையடுத்து, அவரது வீட்டில் மின்வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
தமிழ்த்திரையுலகின் முக்கிய இயக்குநராக இருந்து வருபவர் தங்கர்பச்சான். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின் கணக்கீடு தொடர்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் புகார் ஒன்றை எழுப்பியிருந்தார். இதையடுத்து, சென்னை, ஈக்காட்டுதாங்கலில் உள்ள தங்கர்பச்சான் வீட்டிற்கு மின்பகிர்மான கழக அதிகாரிகள் நேற்று நேரில் சென்றனர். பின்னர், தங்கர்பச்சானை நேரில் சந்தித்து அவரது குறைகளை கேட்டறிந்தனர்.
இதுதொடர்பாக, மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது முகநூல் பக்கத்தில் தங்கர்பச்சான் வீட்டில் அதிகாரிகள் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தது தொடர்பாக பதிவிட்டிருந்தார். மேலும், தங்கர்பச்சான் சமூக வலைதளத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அளிக்கப்பட்டுள்ள விளக்க அறிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் மின்கட்டணம் தொடர்பாக, சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்துள்ளதன் அடிப்படையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கிண்டி, செயற்பொறியாளர் வேல்முருகன் கடந்த 7-ஆம் தேதி நேற்று மாலை 5.45 மணியளவில் சென்னை ஈக்காட்டுத்தாங்கல், அச்சுதன் நகரில் உள்ள அவரது வீட்டில் தங்கர்பச்சானை நேரில் சந்தித்து அவருடைய குறைகளை கேட்டறிந்தார்.
தங்கர்பச்சான் வீட்டில் இரு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளது. அதன் கணக்கீட்டு விபரங்களின் பட்டியல் அவரிடம் வழங்கப்பட்டு, கணக்கிட்டு விபரங்களின் பட்டியலில் அவரிடம் வழங்கப்பட்டு, கணக்கீட்டு முறை விளக்கப்பட்டது. அதற்கு, அவர் தன்னுடைய வீட்டில் உள்ள மின் இணைப்பு கணக்கீடு தொடர்பாக புகார் அளிக்கவில்லை எனவும், தற்போது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின்கணக்கீடு செய்யும் முறையினை மாற்றி மாதத்திற்கு ஒருமுறை கணக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்ததாகவும் கூறினார்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஊரடங்கு காலத்தில் பல பகுதிகளில் மின்கட்டணம் வசூலிப்பதில் குளறுபடி ஏற்பட்டதாகவும், குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு ஆயிரக்கணக்கில் மின்கட்டணம் வந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து, மின்கட்டணம் வசூலிப்பதில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.