மின் வெட்டு! கலாய்த்த சீமான்! சொகுசு பங்களா எண் கொடுத்தா... பதில் கொடுத்த செந்தில் பாலாஜி!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிவிட்ட பதிவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரீ- ட்வீட் செய்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி இரவு மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து அன்று முதல் இன்று வரை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இரவு மற்றும் பகல் நேரங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முதல் சிறியவர்கள், பெரியவர்கள் என இந்த கத்திரி வெயில் காலத்தில் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்த தொடர் மின்வெட்டு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் மின் தடைபடுவது குறித்து கேள்வி எழுப்பினர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆளும் திமுக அரசை கலாய்க்கும் விதமாக ட்வீட் ஒன்றை பதிவிட்டார். அதில், ஏப்பா சீமான்.. இந்த ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனையை டிவில போடுறாங்கலாம்.. அது என்னனு பார்க்கலாம்னு பாத்தா எழவு கரண்ட் இல்லப்பா.. அது தான் பெரியம்மா திராவிட மாடல்..! என்று குறிப்பிட்டார்.
இந்தநிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிவிட்ட பதிவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரீ- ட்வீட் செய்தார். அதில், கடும் கோடையிலும் உச்சபட்ச மின் தேவை இருந்த போதும் தமிழ்நாடு மின் வாரியம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அண்ணன் சமீபத்தில் குடியேறி இருக்கும் கடற்கரையோர சொகுசு பங்களாவின் மின் இணைப்பு எண்ணைக் கொடுத்தால் அங்கு 'உண்மையிலேயே’ மின் வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்கிறேன் என்று தெரிவித்தார். தற்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவிட்ட பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
கடும் கோடையிலும் உச்சபட்ச மின் தேவை இருந்த போதும் தமிழ்நாடு மின் வாரியம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அண்ணன் சமீபத்தில் குடியேறி இருக்கும் கடற்கரையோர சொகுசு பங்களாவின் மின் இணைப்பு எண்ணைக் கொடுத்தால் அங்கு 'உண்மையிலேயே’ மின் வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்கிறேன். https://t.co/4KegbnFuub
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) May 8, 2022
முன்னதாக மின்வெட்டு குறித்து சட்டசபையில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ''மத்தியத் தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தில் சுமார் 750 மெகாவாட் மின்சாரம் திடீரெனத் தடைபட்டது. இதன் காரணமாக, சில இடங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட்டது.
தமிழ்நாட்டின் தினசரி மின்சாரத் தேவை 17 ஆயிரம் மெகாவாட் ஆகும். இதில் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 6,500 முதல் 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசின் தொகுப்பில் இருந்து வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு திடீரென்று 4,909 மெகாவாட்டாக குறைக்கப்பட்டது. இந்த பற்றாக்குறையே அறிவிக்கப்படாத மின் தடைக்கு முக்கியக் காரணம்.
சூரிய ஒளி மின் சக்தி (சோலார்) மூலம் 3 ஆயிரத்து 33 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. மேலும், தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு மின் தடை பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது'' என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்