Election Commission : எதிர்பார்ப்பை கிளப்பும் பொதுத்தேர்தல்.. ஆயத்தப்பணிகளை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம்
பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை ஆய்வு செய்யும் நோக்கில் தென் மாநில தேர்தல் அதிகாரிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது.
பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள்:
அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுடன் ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளின் முக்கிய அம்சங்களை ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், கேரளா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாநில காவல்துறை ஒருங்கிணைப்பு (Nodal) அதிகாரிகளின் மண்டல மாநாடு இந்தியத் தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஹோட்டல் ரேடிசன் புளூவில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியால் நடத்தப்பட்டது.
தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்பு:
இந்த மாநாட்டில், மூத்த துணைத் தேர்தல் ஆணையர் மற்றும் மக்களாட்சி மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான இந்திய சர்வதேசப் பயிற்சி(IIIDEM) நிறுவனத்தின் தலைமை இயக்குநர் தர்மேந்திர ஷர்மா, மூத்த துணைத் தேர்தல் ஆணையர் நிதேஷ் வியாஸ், துணைத் தேர்தல் ஆணையர் மனோஜ் குமார் சாஹூ மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள், மேற்கண்ட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறை ஒருங்கிணைப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டு, நாடாளுமன்ற தேர்தலுடன் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. அதற்காக, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டது.
ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த அரசியலைப்பில் திருத்தம் மேற்கொள்வது, அரசியல் கட்சிகளின் ஒப்புதலை பெறுவது என பல சிக்கல்கள் உள்ளன. எனவே, வரும் 2024ஆம் ஆண்டு, இதை அமல்படுத்துவது கடினம் என கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், மக்களவை தேர்தலுடன் பதவிக்காலம் நிறைவு பெறும் சட்டப்பேரவைகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது.