Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
”பிரதமர், உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்த மாநாட்டில், நூற்றுக்கணக்கான ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் நாம் தமிழர் கட்சியை, பிரிவினைவாத இயக்கம் என வருண்குமார் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது”
தமிழ்நாட்டில் சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் கட்சி, ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று நூற்றுக்கும் மேற்பட்ட இளம் ஐபிஎஸ் அதிகாரிகள், மாவட்ட எஸ்.பி.க்கள் பங்கேற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில், திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர், உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்த மாநாடு
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்த இந்த ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் பல்வேறு குழுக்களாக நாடு முழுவதுவதிலிருந்து நூற்றக்கணக்கான ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். இளம் மாவட்ட எஸ்.பி.க்களாக உள்ள திறம்பட செயல்படும் போலீஸ் அதிகாரிகள் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். பல்வேறு வகையில் குற்றத்தை தடுக்கும் யோசனைகளை குழுவிற்கு தலைமையேற்கும் ஐபிஎஸ் அதிகாரிகள் மேடையிலேயே முன் வைக்கும் வாய்ப்பு இந்த மாநாட்டில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
திருச்சி எஸ்.பிக்கு அழைப்பு
இந்நிலையில், தமிழ்நாட்டின் இளம் எஸ்.பியாக திருச்சியில் பணியாற்றும் வருண்குமார் ஐபிஎஸ்க்கு உள்துறை செயலகம் இந்த மாநாட்டில் பங்கேற்கும் படியும், நாடு முழுவதும் உள்ள 22 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவிற்கு தலைமையேற்று சைபர் க்ரைம், இணையதள மிரட்டல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் அதனை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விளக்கும்படி அவருக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தியிருந்தது.
அதனடிப்படையில், இணையதள குற்றங்களை கண்காணிப்பது, தடுப்பது என்பது குறித்து விரிவான விளக்கத்தை அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் திருச்சி எஸ்.பி.வருண்குமார் ஐபிஎஸ் ஆதாரங்களோடு விளக்கி பேசினார்
நாம் தமிழர் பிரிவினைவாத கட்சி – தேசிய மாநாட்டில் பரபரப்பு குற்றச்சாட்டு
இந்நிலையில், இதுபோன்ற சைபர் குற்றங்களால் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக உள்ள தானும் தன்னுடைய குடும்பத்தினருமே தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டதாகவும், அதற்கு காரணம், நாம் தமிழர் என்ற கட்சி என்றும் இந்தியா முழுவதிலிருந்தும் பங்கேற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் பகிரங்கமாக திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நாம் தமிழர் கட்சியை கண்காணிக்க வேண்டும், இந்த கட்சியை சேர்ந்தவர்கள் பிரிவினைவாதத்தை தூண்டுவதாகவும் அவர் தேசிய அளவிலான மாநாட்டில் பேசியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக பார்க்கப்படுகிறது
பிரதமர் மோடி தொடங்கி வைத்த மாநாட்டில், நாம் தமிழர் கட்சி பற்றி திருச்சி எஸ்.பி.பேச்சு#SPVarunkumar #TrichySP #NTK #Seeman pic.twitter.com/uSdewf36Vr
— ABP Nadu (@abpnadu) December 4, 2024
நாம் தமிழர் கட்சிக்கு சிக்கல் ?
ஏற்கனவே, என்.ஐ.ஏ உள்ளிட்ட தேசிய அமைப்புகளின் சோதனை வளையத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சி குறித்து பிரதமர், உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்த தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் பகிரங்கமாக வருண்குமார் ஐபிஎஸ் பேசியுள்ளதால், அந்த கட்சிக்கு மேலும் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
பிரிவினைவாத இயக்கங்களையும் கட்சிகளை தடை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியை பிரிவினைவாத இயக்கம் என்றும் அந்த கட்சியின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் வருண்குமார் ஐபிஎஸ் மாநாட்டில் விளக்கி பேசியிருப்பதன் மூலம், அந்த கட்சிக்கு விரைவில் மத்திய அரசு மூலம் நெருக்கடி வர வாய்ப்புள்ளதாக போலீஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
திருச்சி எஸ்.பி. வருண்குமார் அவரது மனைவியான புதுகை எஸ்.பி வந்திதா பாண்டே உள்ளிட்ட குடும்பத்தினரை சில நாட்களுக்கு முன் இணைதளத்தில் ஆபாசமாக தாக்கி பலர் எழுதி வந்ததும், அதில் சிலர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.