Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
அரையாண்டுத் தேர்வுக்கான பாடத்திட்டம் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. டிசம்பர் 2ஆம் தேதி செய்முறைத் தேர்வு தொடங்கி இருக்க வேண்டும்- அமைச்சர் அன்பில்.
ஃபெஞ்சல் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேவைப்படும் இடங்களில் அரையாண்டுத் தேர்வுகள் சில ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம் என்றும் அவர் கூறி உள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 15 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பள்ளிகளின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி நவில்தல் மற்றும் பாராட்டு விழாவை பொது நூலகத்துறை பணியாளர் கழகம் (சி&டி) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடத்தியது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும்போது, ''விழுப்புரம் மாவட்டத்தில் 45 பள்ளிகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. அங்கு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் 17 விதமான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளோம்.
அரையாண்டுத் தேர்வு எப்போது?
அரையாண்டுத் தேர்வுக்கான பாடத்திட்டம் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. டிசம்பர் 2ஆம் தேதி செய்முறைத் தேர்வு தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் மழை காரணமாக ஜனவரி மாதம் செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
டிசம்பர் 9 முதல் 23 வரை அரையாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளில், தேவைப்பட்டால் அரையாண்டுத் தேர்வு சில பாடங்களை ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்திக் கொள்ளலாம். இதுகுறித்து அந்தந்த தலைமை ஆசிரியர்களே முடிவு செய்துகொள்ளலாம். பாதிக்கப்பட்ட பள்ளிகளில் உள்ளூர் நிர்வாகம் சரிசெய்து கொடுக்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்.
எல்லாப் பகுதிகளிலும் அரையாண்டுத் தேர்வுகள் தள்ளி வைப்பா?
எந்தெந்த மாவட்டங்களில், எந்த பள்ளிகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறதோ, வெள்ள பாதிப்பு இருக்கிறதோ அங்கு மட்டும் அரையாண்டுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகின்றன’’
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாம்:Fengal Cyclone: புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகள்; இதையெல்லாம் கட்டாயம் செய்யுங்கள்- அமைச்சர் அன்பில் அதிரடி உத்தரவு