EPS Statement: மிக்ஜாம் புயல் நிவாரணத்தை ரூ.12000-மாக உயர்த்த வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்!
மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகையை ரூ 12,000 ஆக உயர்த்தி தர தமிழ்நாடு அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் ரூ.6000 த்தில் இருந்து ரூ.12000 மாக உயர்த்தி தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.
புயல் பாதிப்பு:
இது தொடர்பான அவரது அறிக்கையில், “ மிக்ஜாம் புயல் மழையால் சென்னை மாநகரம், புறகர் பகுதி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுமக்கள், வணிகர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களும் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளானார்கள்.
விடியா திமுக அரசு முன்திட்டமிடாமல், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஆட்சிப் பொறுப்பேற்ற 31 மாதங்களில், முறையாக மழை நீர் வடிகால் பணிகளை செய்யாததன் காரணமாக, கடந்த வாரம் பெய்த மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
12 ஆயிரம் வழங்க வேண்டும்:
பொதுமக்கள் கடந்த ஒருவார காலமாக, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, உடைமைகளை இழந்து, வாகனங்களை இழந்து, தொழிலை இழந்து, இந்த அவல ஆட்சியாளர்கள் மீது தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வந்த நிலையில், நிவாரணத் தொகை என்று ஒரு சொற்ப தொகையை அறிவித்திருப்பது, பாதிக்கப்பட்ட மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6,000/- ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று இந்த விடியா திமுக அரசு அறிவித்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையான 6,000/- ரூபாயை உயர்த்தி 12,000/- ரூபாயாக வழங்குவதுடன், எந்த நிபந்தனையும் விதிக்காமல், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
கடும் பாதிப்பு:
ஏழை, எளிய, சாமானிய மக்களின் அன்றாட போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இந்த மழை வெள்ளத்தால் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு இயங்க முடியாத நிலையில் உள்ளது. இதை உடனடியாக அரசு, அந்தந்த வாகனங்களுக்குண்டான நிறுவனங்கள் மூலமாக, பகுதி வாரியாக சிறப்பு வாகன பழுது நீக்கும் முகாம்களை ஏற்பாடு செய்து அந்த வாகனங்களை அரசு செலவில் பழுது நீக்கி, பாதிக்கப்பட்டவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப ஏற்பாடு செய்யுமாறு இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வடிந்த பிறகு கழிவு நீர் உட்புகுந்ததால், வீடுகள் மற்றும் வீதிகள் சேறும் சகதியுமாக தேவையற்ற குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு அடைந்து தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அரசு போர்க்கால அடிப்படையில் சேறு, சகதி, குப்பை கழிவுகளை அகற்றுவதுடன், கிருமிநாசினிகளைத் தெளித்து தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும். அப்பகுதி மக்களுக்கு தகுந்த சுகாதார மருத்துவ சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்து, சேற்றினால் ஏற்பட்டுள்ள சேற்றுப் புண், தோல் அரிப்பு (அலர்ஜி) போன்றவற்றிற்கு உரிய சிகிச்சையும், மருந்தும் அளிக்குமாறு வலியுறுத்துகிறேன்.
இழப்பீடு:
சென்னை மணலி, மணலிப்புதூர், எர்ணாவூர் போன்ற பகுதிகளில் மழை நீருடன் அப்பகுதியில் இயங்கிவரும் ஆலைகளின் ஆயில் கழிவுகளால் சுமார் ஐந்தாயிரம் குடியிருப்புகளில் மக்கள் வாழ முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப கூடுதலாக 25,000/- ரூபாய் நிவாரணம் வழங்குவதுடன், எண்ணெய் கழிவுகளை தகுந்த தொழில்நுட்ப உதவியுடன் தூய்மைப் படுத்தும் பணியினையும் செய்துதர வலியுறுத்துகிறேன்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சுமார் இரண்டாயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக அதிகாரிகளை அனுப்பி பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு 25,000/- ரூபாய் இழப்பீடாக வழங்க வலியுறுத்துகிறேன்.
மேலும், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் போன்ற மாவட்டங்களிலும், நஞ்சை நிலங்களில் பயிர் செய்திருந்த நெற்பயிர்கள் தற்போது பெய்த கன மழையால் முழுவதுமாக சேதமடைந்துள்ளன என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே, ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு 17,000/- ரூபாய் வழங்கிட இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்காக, மேற்கண்ட நிவாரணங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக வழங்கிட இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.