Kallakurichi: கள்ளச்சாராய மரணம்.. 3 குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கும் அதிமுக - இபிஎஸ் நேரில் ஆறுதல்
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் 80க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனிடையே கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். அவருக்கு ஆட்சி, அதிகாரம் மட்டுமே முக்கியம். மக்கள் மீது அக்கறை இல்லை. சென்னையில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சையளித்து இருந்தால் பலரின் உயிரை காப்பாற்றியிருக்கலாம். கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கும், ஆளும் கட்சியை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.
கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார் ஏற்கனவே புகாரளித்தும் கள்ளச்சாராய விற்பனையை அரசு தடுக்கவில்லை. விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோயுள்ளது. தமிழ்நாடு முழுவதும் போதை மாநிலமாக மாறியுள்ளது. அதனை தடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு, காவல்துறையினரின் அலட்சியத்தால் உயிரிழப்புகள் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயத்துக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தும் போதிய மருந்துகளும் இல்லை. அங்கு தேவையான மருத்துவர்கள் நியமிக்கவில்லை. கள்ளச்சாராய மரணத்தை வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு என முன்னாள் மாவட்ட ஆட்சியர் பொய் கூறினர். மேலும் கள்ளச்சாராயத்தால் பெற்றோர்களை இழந்த 3 குழந்தைகளின் கல்வி செலவை அதிமுகவே ஏற்கும். மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்” எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருணாபுரம் சென்ற எடப்பாடி பழனிசாமி, அங்கு இறந்தவர்கள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் சென்று அஞ்சலி செலுத்தியதோடு மட்டுமல்லாமல் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.