இது அவர்களுக்கும் பொருந்துமா? ஆ.ராசா பேசிய வீடியோவை காட்டி கேள்வி கேட்ட எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக அரசு கொண்டுவந்த மசோதாவை திமுக எம்.பி ஆ.ராசா விமர்சித்து பேசிய வீடியோவையும், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மசோதாவையும் ஒப்பிட்டு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டசபை கூட்டத்தொடரின் கடைசிநாளான இன்று நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றும் தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. அப்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வு அச்சத்தால் சேலத்தில் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டதற்கு தமிழக அரசுதான் பொறுப்பு என்று குற்றம் சாட்டினார். மேலும், அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அ.தி.மு.க. அரசால் நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை கண்டித்து பேசிய வீடியோவை காட்டி, தற்போது தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ள நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை ஒப்பிட்டும் கேள்வி எழுப்பினார்.