அதிரடி காட்டும் கொள்கை குழு! யார் இந்த ஜெயரஞ்சன்?
தமிழக அரசின் மாநில வளர்ச்சிக்குழு துணைத் தலைவராக ஜெயரஞ்சன் நியமிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 1971-ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக பதவி வகித்தபோது தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு உருவாக்கப்பட்டது. மாநிலத்தின் வளர்ச்சிக்கான பங்களிப்பில் இந்த குழுவின் செயல்பாடு மிகவும் முக்கியமானது. முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்த அமைப்பு உறுப்பினர்கள், மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவரின் கீழ் செயல்படுவார்கள்.
இந்த அமைப்பு கடந்தாண்டு மாநில வளர்ச்சி குழுவாக மாற்றப்பட்டது. தற்போது இந்த குழுவின் துணைத்தலைவராக பொருளாதார அறிஞரும், பேராசிரியருமான ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, இவர் எழுதிய `கருப்பு பணமும், செல்லாத நோட்டும்’ மிகவும் பிரபலம். இவர் எழுதிய `தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம் வீழ்ந்த கதை’ என்ற புத்தகமும், இவர் மக்கள் நலனுக்கான தீப்பொறி என்பதை பறைசாற்றியது.
ஜெயரஞ்சன் 1960-ஆம் ஆண்டு மே மாதம் 29-ந் தேதி பிறந்தவர். தற்போது, திருவான்மியூரில் உள்ள கொட்டிவாக்கத்தில் வசித்து வரும் அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 1983-ஆம் ஆண்டு எம்.எஸ்.சி. பட்ட மேற்படிப்பை முடித்தார். பின்னர், புதுச்சேரியில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு 1984 முதல் 1994-ஆம் ஆண்டு வரை பேராசிரியராக பணிபுரிந்தார். பின்னர், 1995-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தை பெற்றார்.
ஜெயரஞ்சன் பொருளாதாரம் தொடர்பாக எழுதிய கட்டுரைகள் ஏக பிரசித்தம். 1980-ஆம் ஆண்டுகளில் ஆராய்ச்சி மாணவராக ஜெயரஞ்சன் இருந்தபோது அவரது நண்பர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தூண்டுதலின்பேரில் பொருளாதார கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார். தொடக்க கட்டத்தில் வேளாண்துறையையும், அதன் பொருளாதார நிலை குறித்தும் அதிகமாக எழுதிய அவர், தமிழகத்தில் காவிரிப்பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது, காவிரி ஆறும், அதனால் விவசாயம் சார்ந்த பொருளாதாரம் பற்றியும் ஆய்வுக்கட்டுரை எழுதினார். புதுவை கல்லூரியில் இருந்து வெளியேறிய பிறகு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல்வேறு ஆய்வு நிறுவனங்களில் முழுநேர ஆய்வுப் பணியாளராக பணிபுரிந்தார். இந்தியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் நீர்ப்பாசனத்தின் ஒப்பீட்ட ஆய்வு குறித்து 1987 மற்றும் 88-ஆம் ஆண்டுகளில் கட்டுரைகளை எழுதினார்.
முதன்மை புலனாய்வாளராக பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை எழுதிய அவர், டெல்லி, வி.வி.கிரி தேசிய தொழிலாளர் நிறுவனத்திற்காக, 1998-99-ஆம் ஆண்டில் திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளில் பணியாற்றும் குழந்தை தொழிலாளர்கள் பற்றியும், 2000-01-ஆம் ஆண்டில் குரோம்பேட்டை தோல் தொழிற்சாலையில் பணியாற்றும் குழந்தை தொழிலாளர்கள் பற்றியும் எழுதியவை கடுமையான மனங்களையும் உடைத்து கேள்வி கேட்டது. மத்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்துறையின் சார்பாக தேசிய குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு திட்டத்திற்காக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் குழந்தைத் தொழிலாளர்களின் நிலை குறித்து முதன்மை புலனாய்வாளராக மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டவர் ஜெயரஞ்சன். தமிழகத்தில் உப்புத்தொழில்களின் கட்டமைப்பு குறித்து டெல்லி ஆய்வு நிறுவனத்திற்காக ஆய்வு செய்தவரும் அவரே.
பெங்களூரில் உள்ள இந்திய சமூக நிறுவனத்திற்காக `தலித்துகளும், பழங்குடியின மக்களும் நான்கு தென் மாநிலங்களில் இழந்தது’ என்ற தலைப்பில் முதன்மை ஆய்வாளராக ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். தமிழக அரசின் தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சி கழகத்திற்காக வாழ்வாதார மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பித்தார். யுனிசெஃப்பிற்காக தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் குடிநீர் விநியோகம் மற்றும் துப்புரவு குறித்து முதன்மை புலனாய்வாளராக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தார்.
”உலகமயமாக்கல் மற்றும் சமூகத்துறை: முன்னேறிய மாநிலத்தில் இருந்து ஒரு பார்வை” என்னும் ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியராக பணியாற்றினார். இந்தியாவில் உப்புத்தயாரிப்பின் நிலை அறிக்கை ஒன்றையும் தயார் செய்தார். 2010-ஆம் ஆண்டு ஆந்திரா மற்றும் தமிழகத்தில் உப்புத் கூட்டுறவு எவ்வாறு இயங்குகிறது மற்றும் அதன் கட்டமைப்புகள் குறித்து கட்டுரை எழுதினார்.
யுனிசெப்பிற்காக கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழகத்தில் குழந்தைகளின் தொகை குறித்து எழுதிய அவர், கடந்த 2015-ஆம் ஆண்டு குறைந்தபட்ச கூலியும், கூலி நிர்ணயமும் என்ற தலைப்பில் தினக்கூலித் தொழிலாளர்கள் சந்திக்கும் சிக்கல்கள் குறித்து டெல்லியில் உள்ள நிறுவனத்திற்காக எழுதினார். கடந்த 2016-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்திற்காக தெற்கு ஆசியாவில் அரசியல் கலாச்சாரங்கள் என்ற திட்டத் தயாரிப்பிற்காக `தமிழ்நாட்டில் ஜனநாயக தேர்தல்கள், ஊழல்கள் மற்றும் மணல் சுரங்கங்கள்’ என்ற தலைப்பில் அவர்கள் எழுதிய வார்த்தைகள் அனல் ரகம். காவிரி ஆற்றில் உள்ள பொருளாதார சிக்கல்கள் குறித்து, 1960 முதல் 2015 வரை காவிரி டெல்டாவில் நிலக்கால உறவுகளில் மாற்றத்தின் செயல்முறை என்ற ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்தார். 2016-ஆம் ஆண்டு யுனிசெப்பிற்காக தமிழகத்தில் உள்ள குழந்தைகளின் நிலை. சமூக குறிகாட்டிகள் சுயவிவரம் என்ற ஆய்வுக்கட்டுரையை எழுதினார்.
இதுபோன்று தமிழகம், இந்தியா என அனைத்துகட்ட பொருளாதார நிலைகள் குறித்து பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை எழுதிய அவர், சமீபத்திய ஆண்டுகளாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொருளாதார நிகழ்வுகள், நிதிநிலை அறிக்கை குறித்து தெளிவாக மக்களுக்கு விளக்கம் அளித்து வருகிறார். அவருக்கெதிராக வாதம் செய்ய வருபவர்கள், யோசிக்காமல் எந்த வார்த்தையையும் பேசி விட முடியாதபடிக்கு, அடித்து ஆடுவதில் வல்லவர் என மக்களிடம் அறியப்படுபவர் ஜெயரஞ்சன். மாநில வளர்ச்சிக்குழு துணைத் தலைவராக ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிகிறது. சமூகநீதி நிலைநாட்டப்பட்டால் மட்டுமே பொருளாதார வளர்ச்சி அடைய முடியும் என்று ஆணித்தரமாக அடித்துச்சொல்லும் ஜெயரஞ்சனிடம் எதிர்பார்ப்புகள் குவிந்துள்ளன.