நீதிபதிகள் கருத்துக்களை மீடியாக்கள் பதிவு செய்யக்கூடாது.. உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்..
ஊடகங்களில் பதிவு செய்யப்பட்ட கருத்துகளைக் கொண்டு காவல்துறை தங்கள் மீது கொலை வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் இருப்பதற்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் - தேர்தல் ஆணையம்
![நீதிபதிகள் கருத்துக்களை மீடியாக்கள் பதிவு செய்யக்கூடாது.. உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்.. ECI has moved to chennai high court asking media to refrain from publishing comments of the judges நீதிபதிகள் கருத்துக்களை மீடியாக்கள் பதிவு செய்யக்கூடாது.. உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/30/af25c1e23456c0347cc7b9549e8d3eec_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வாய்வழி அவதானிப்புகளை ஊடகங்கள் பதிவிடுவதைத் தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது தேர்தல் ஆணையம். நீதிமன்ற அவதானிப்புகளை ஊடகங்கள் பதிவிடுவதன் காரணமாக தேர்தல் ஆணையத்தின் பெயர் கலங்கப்பட்டுவிட்டதாக புகார் எழுப்பியுள்ளது ஆணையம்.
கடந்த 26 ஏப்ரல் அன்று சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீப் பனர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தலைமையிலான அமர்வு, “தேர்தல் காலத்தில் ஆணையம் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் எதையும் பின்பற்றாதது குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது, ‘தேர்தல் சமயத்திலும் பரப்புரை நேரத்திலும் யாருமே கொரோனா விதிகளைப் பின்பற்றவில்லை.
எவருமே மாஸ்க் அணியவில்லை, சானிட்டைசர் உபயோகிக்கவில்லை. மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கையை ஆணையம் மேற்கொள்ளவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு தேர்தல் ஆணையமே முழுக்க முழுக்க காரணம். அவர்களைக் கொலை குற்ற வழக்கு பதிவு செய்யவேண்டும். கூட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் கொரோனா அதிகம் பரவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டபோது நீங்கள் என்ன வேற்று கிரகத்திலா இருந்தீர்கள்? வாக்கு எண்ணிக்கைக்கான கொரோனா விதிகள் எதுவும் வரையறுக்கப்படவில்லை. வாக்கு எண்ணிக்கையையே நிறுத்திவைத்துவிடுவோம். தற்போது உயிரோடு இருப்பதும் பாதுகாத்துக்கொள்வதும்தான் அனைத்தையும் விட முக்கியமானது” என காரசாரமாக கருத்து பதிவு செய்திருந்தார் தலைமை நீதிபதி.
இது ஊடகங்கள் அனைத்திலும் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.இதையடுத்து இன்று உயர்நீதிமன்றத்தில் மனு அளித்த தேர்தல் ஆணையம் ’நீதிபதிகளின் வாய்மொழி அவதானிப்புகளை ஊடகங்கள் பதிவு செய்வதை நிறுத்தவேண்டும்.நீதிமன்றத்தின் ஆர்டரில் இடம்பெறுவதைத் தவிர அவர்கள் வேறு எதையும் பதிவு செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். இது தேர்தல் ஆணையம் என்னும் சார்புநிலையற்ற அரசியலமைப்பு நிறுவனத்தையும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட தேர்தல் என்னும் மாபெரும் கடமையையும் கேலிக்குள்ளாக்குகிறது. இதனால் மக்களிடம் ஜனநாயக்த்தின் மீதும் ஜனநாயக நடைமுறைகள் மீதும் நம்பிக்கை போய்விடும்.’ எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த மனுவை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அளித்தார்.
இதன்படி ஊடகங்கள் நீதிமன்ற ஆணைகளில் மிக விவரமாகத் தகவல்கள் இருக்கும் போது அதில் பதிவு செய்யப்படாத நீதிபதிகளின் வாய்மொழிக் கருத்துகளைப் பதிவுசெய்வது கண்டிக்கத்தக்கது. அதனை நிறுத்துவதற்கு உயர்நீதிமன்றம் ஊடகங்களுக்கு உடனடி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் ஊடகங்களில் பதிவு செய்யப்பட்ட கருத்துகளைக் கொண்டு காவல்துறை தங்கள் மீது கொலை வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் இருப்பதற்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 2 மே 2021 அன்று நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)