கொரோனா, ஒமிக்ரான் பரவல் எதிரொலி - போளூர், ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சுவிரட்டு நடத்த தடை
’’போளூர்,கலசப்பாக்கம் கடலாடி, ஆரணி, சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் காளை விடும் விழா மற்றும் மஞ்சுவிரட்டு ஆகிய போட்டிகளை நடுத்துவதற்கு தடை’’
திருவண்ணாமலை மாவட்டத்தில் காளை விடும் விழா மற்றும் மஞ்சுவிரட்டு போன்ற விளையாட்டுகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கப்படாத நிலையில் நேற்று ஆரணி அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் அனுமதியில்லாமல் காளை விடும் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டது மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் காளைகளை ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விட்டபட்டு காளைகள் சீரிப்பாய்ந்தது .இதில் ஒரு சில காளைகள் விழாவை பார்வையிட வந்த பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரை தாக்கியது.
இதில் அந்த பெண் காளையினால் தூக்கி வீசப்பட்டார். மேலும் இதில் மாடுபிடி வீரர்களும் சுமார் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அனுமதி இல்லாமல் காளை விடும் விழா நடத்திய கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விழாக்குழுவினர்கள் 5 நபர்கள் மீது கண்ணமங்கலம் காவல் நிலைய காவலர்கள் வழக்கு பதிவு செய்தனர். இந்தநிலையில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போளுர் மற்றும் கலசபாக்கம் பகுதியை சேர்ந்த காளை விடும் சங்கத்தினர் மற்றும் மஞ்சு விரட்டு நடத்தும் சங்கத்தினர், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் காவல் துறையினர் வருவாய் துறையினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய கோட்டாட்சியர் கவிதா :- கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று அதிகரித்துள்ளது. இதில் திருவண்ணாமலை ஆரணி பகுதியில் 3 நபர்களுக்கு ஓமிக்கரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இதனால் பொங்கல் தினம் வருவதற்கு இன்னும் 9 நாட்கள் இருப்பதால் போளூர்,கலசப்பாக்கம் கடலாடி, ஆரணி, சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் காளை விடும் விழா மற்றும் மஞ்சுவிரட்டு ஆகிய போட்டிகளை நடுத்துவதற்கு தடை விதித்துள்ளது. என்றும் தமிழக அரசு மரு உத்தரவு அளிக்கும் வரை யாரும் காளை விடும் விழா நடத்தக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதிகாரிகள் கூறுவதையும் மீறி விழா நடத்தினால் விழா நடத்துவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் எச்சரித்தார். பொங்கலன்று காளை விடும் விழா மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்து இருந்தாலோ அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்..