Easter 2022: முடிவதும்..தொடர்வதும்.. ஈஸ்டர் பண்டிகையும், அதன் வரலாறும்! ஈஸ்டர் முட்டை சொல்லும் தத்துவம் என்ன?
Easter 2022: ஈஸ்டர் என்றதுமே பெரும்பாலானவர்களுக்கு நினைவுக்கு வருவது ‘ஈஸ்டர் முட்டை’. ஆனால், இந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடுவதற்கு பின் இருக்கும் வரலாறு என்ன?
ஈஸ்டர் திருநாள்
கிறிஸ்த்துவர்களுக்கு இயேசு பிறந்த மாதமான டிசம்பர் மட்டுமே முக்கியமான பண்டிகை இல்லை. அதற்கு அடுத்தப்படியாக பைபிளின் புதிய ஏற்பாட்டின் படி கி.பி 30- இல் இயேசு கிறிஸ்து ரோமானியர்களால் சிலுவையில் அறையப்பட்டு இறந்து, மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்த நாளாக ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்தினம் இரவு அவருடைய சீடர்களுடன் பஸ்கா உணவை பகிர்ந்து கொண்ட தினம் "பரிசுத்த வியாழன்" அதாவது மான்டி வியாழன் (Maundy Thursday) நினைவு கூறப்படுகிறது.
புனிதவெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து பிறகு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். அதற்கு முன்னரே தன் சீடர்களிடம் நான் மரித்த பின் மீண்டும் உயிர்த்தெழுவேன் என்று இயேசு குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நிகழ்வு ‘Passion of Christ’, மற்றும் ‘ Passover’ என்றழைக்கப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகை, மக்கள் செய்த பாவங்களுக்காக, இயேசு தண்டனையை ஏற்றுக் கொண்டதாகவும், மனித குலம் வளர இயேசு தியாகம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது, இயேசு தன்னை வருத்திக் கொண்டு, இம்மானுடம் செழிக்க தன் வாழ்வையே அற்பணித்தார். மரணத்தை வென்ற இயேசுவை கொண்டாடும் தினமாக ஈஸ்டர் அமைந்திருக்கிறது.
ஈஸ்டர் முட்டை கூறும் தத்துவம் என்ன?
மூடிய கல்லறை திறந்து, வான் முழங்க, இடி, மின்னலுடன் மழை பெய்தது. இன்றைய நாளில் இயேசு பிரான் உயிர்தெழுந்தார். அதுவே `ஈஸ்டர் திருநாள்' (Easter).
பாவத்தை அழித்திட, பூமியில் நிலவும் இருள் விலக்கிட, சாவை வென்று இயேசு உயிர்த்தெழுந்த நாள் `பாஸ்கா பண்டிகை' (Pascha) என்றும் அழைக்கப்படுகிறது.
`பாஸ்கா' என்றால் `கடந்து போதல்' என்று பொருள். சாவைக் கடந்து, இயேசு உயிர் பெற்றார் என்பதால்`பாஸ்கா பண்டிகை' எனக் கொண்டாடப்படுகிறது.
ஈஸ்டர் சொல்லும் செய்தி என்னவென்றால், ’இயேசு உயிர்த்தெழுந்ததுபோல, நாமும் அவரோடு ஒன்றி உயிர்த்தெழுவோம். நம் பாவங்களை விட்டொழிப்போம். புதிய நல்வாழ்விற்கு தயாராவோம்.’ என்பதுதான்.
நம்மை பாவங்களில் இருந்து ரட்சிக்கும் இயேசுவின், துன்பங்களிலும், மரணத்திலும் உயிர்ப்பிலும் பங்குபெறுவோம்.
சாவு வீழ்ந்தது, வெற்றி கிடைத்தது’ (1 கொரி. 15:54) என்கிறது பைபிள்.
`ஈஸ்டர் திருவிழா' என்றவுடன் `ஈஸ்டர் முட்டை' நமக்கு நினைவுக்கு வரும். உலக அளவில், `ஈஸ்டர் முட்டை' என்ற பெயரில் பல வண்ணங்களில் சாக்லேட், கேக் தயார் செய்து, அதைப் பிறருடன் பகிர்ந்துகொள்வார்கள்.
முட்டை என்பது இரு பிறப்பு அல்லது மறுபிறப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. எனவேதான் நமது பழைய வாழ்க்கையில் இருந்து, புதிய வாழ்க்கைக்கு மாறுவது புதுப்பிறப்பின் ஈஸ்டர் திருநாளின் அர்த்தத்தைத் தரக்கூடியதாக அமைகிறது. அதாவது, கோழியின் முட்டையில் இருந்து ஒரு உயிர் வெளிவருகிறது. கோழியிடமிருந்து முட்டை வருவம் நிகழ்வையும் குறிக்கிறது.
சாவை வென்று என்றும் நம்மை ரட்சிக்கும் இயேசு பிரான் உயிர்தெழுந்த தினமே ஈஸ்டர் பண்டிகை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்