நாய் பிரியர்களா நீங்கள்? ஜாக்கிரதை! வளர்க்கும் முன் இந்த ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க!
இந்தியாவில் சமீப காலமாக வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் அக்கம் பக்கத்தினரை கடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
இந்தியாவில் சமீப காலமாக வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் அக்கம் பக்கத்தினரை கடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி வருகிறது. வீட்டில் நாய் வளர்க்கும் விவகாரம் அதன் உரிமையாளரை கைது செய்து அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கும் அளவுக்கு உள்ளது.
நாய்க்கடியால் இறப்போர், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த நாய்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டினாலும், அதற்கான விதிமுறைகளை பின்பற்றுவது இல்லை என்பது கவலையாக உள்ளது. இதன் காரணமாக நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, தொற்றுநோய் பரவும் அபாயம் என பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் முடிவு கிடைப்பதாக இல்லை. நாம் இந்த செய்தியில் நாய் வளர்ப்பதற்காக அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். இது ஒவ்வொரு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
விதிமுறைகள்
- நீங்கள் வளர்க்க விரும்பும் நாய் வகை இந்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ளதாக என்பதை சரிபார்க்க வேண்டும்
- நாய் வளர்ப்பவர்கள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
- வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
- உரிமம் பெறுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவ குழுவினரிடம் நாய்களின் மருத்துவ அறிக்கை பெறுவது முக்கியம்.
- விண்ணப்பத்தில் நாயின் இனம், வயது, பாலினம், அடையாளம், இனப்பெருக்கம் மற்றும் தடுப்பூசி சம்பந்தப்பட்ட விவரம் அனைத்தையும் அளிக்க வேண்டும்.
- அஞ்சல் தலை வடிவிலான நாயின் வண்ண புகைப்படம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
- உள்ளாட்சி அமைப்புகளிடம் விண்ணப்பத்தை சமர்பித்த நிலையில், அது சரிபார்க்கப்பட்டு கால்நடைத்துறையிடம் உரிமம் பெற பரிந்துரை செய்யப்படும்.
- ஆண்டுக்கு ஒருமுறை உரிமம் கண்டிப்பாக புதுப்பிக்கப்பட வேண்டும்
- நாய்களுக்கு அடிப்படை தேவைகளான உணவு, சுத்தமான தண்ணீர், தங்குமிடம் போன்ற வசதிகளை செய்துக் கொடுத்து நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டும்.
- இந்திய தண்டனை சட்டப்படி வளர்ப்பு விலங்குகளை கைவிடுவது, தவறாக நடத்துவது போன்றவை குற்றமாகும். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
- நாய் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை வளர்க்க முடியாவிட்டால் அதனை முறைப்படி உள்ளாட்சி அமைப்புகளால் அங்கீகரிப்பட்ட இடங்களில் கொடுத்து விட வேண்டும்.
எனவே சட்டப்பூர்வமாக விதிகளை பின்பற்றி செல்லப்பிராணிகளை வளர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.