DMK Youth Wing Conference: திமுக இளைஞரணி மாநாடு : 3 லட்சம் பேரை நேரில் அழைக்க, பைக் பிரச்சாரப் பேரணி - உதயநிதி அதிரடி
DMK Youth Wing : திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு 3 லட்சம் பேரை நேரில் சென்று அழைக்கும் வகையில், 8,647 கிலோ மீட்டர் தூரத்திற்கான இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணியை உதயநிதி நாளை தொடங்கி வைக்கிறார்.
DMK Youth Wing Conference: திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு 38 மாவட்டங்களுக்கும் பயணிக்கும் வகையிலான, 188 இருசக்கர வாகனங்கள் அடங்கிய பிரச்சாரப் பேரணி நாளை தொடங்குகிறது.
திமுக இளைஞரணி மாநாடு:
மறைந்த முதலமைச்சர் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட திமுகவில் எத்தனையோ அணிகள் இருந்தாலும், மிக முக்கியமானதாகவும், வலுவானதாகவும் இருப்பது இளைஞரணி. இது அக்கட்சியின் தற்போதைய தலைவரான ஸ்டாலினால் உருவாக்கப்பட்டது என்பதும் அதற்கு முக்கிய காரணமாகும். 1980ம் ஆண்டு இந்த அணி தொடங்கப்பட்டாலும், கடந்த 2007ம் ஆண்டு தான் திமுக இளைஞரணியின் முதல் மாநாடு நடைபெற்றது. அதைதொடர்ந்து, 16 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் டிசம்பர் 17ம் தேதி திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சேலத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு திமுக இளைஞரணியின் தற்போதைய செயலாளரும், முதலமைச்சர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதியின் அறிவிப்பின் பேரில் நடைபெறுகிறது.
இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி:
இந்நிலையில் மாநாட்டை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மாபெரும் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி தொடங்க உள்ளது. இதனை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி நாளை காலை 11 மணியளவில் தொடங்கி வைக்கிறார். 188 இருசக்கர வாகனங்களில் 38 மாவட்டங்களில் உள்ள 234 தொகுதிகள் மட்டுமின்றி, புதுச்சேரி வழியாகவும் பரப்புரை செய்ய உள்ளனர். 13 நாட்கள் தொடரும் இந்த 8 ஆயிரத்து 647 கிலோ மிட்டர் தூரம் பயணத்தில், 504 பிரச்சார மையங்கள் மற்றும் 38 தெருமுனை பிரச்சாரங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பயணத்தின் போது 3 லட்சம் இளைஞர்களை நேரில் சந்தித்து, மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வள்ளுவர், பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் என நான்கு மண்டலங்களாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு இந்த பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.
உதயநிதிக்கான மாநாடு:
மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டிற்கான போட்டியாக தான், திமுகவின் இளைஞரணி மாநாட்டிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுவும் அதிமுகவின் கோட்டை எனப்படும் கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் தான் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் மூலம் தனக்கு பிறகு திமுகவின் தலைவர் தனது மகன் உதயநிதி தான் என்பதை வெளிப்படையாக உறுதி செய்ய ஸ்டாலின் முற்படுகிறார். ஏற்கனவே, திமுக ஆட்சியின் மறைமுக முதலமைச்சராகவும், திமுகவின் முடிசூடா மன்னராகவும் உதயநிதி செயல்படுவதாக பல்வேறு தரப்பினராலும் கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் இந்த மாநாட்டை, உதயநிதிக்கான இமேஜ் பூஸ்டராக மாற்ற திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
ஒரே கல்லில் இரண்டு மாங்கா..!
மாநாட்டை சேலத்தில் நடத்துவதன் மூலம் திமுகவை கொங்கு பகுதியிலும் பலப்படுத்த திமுக திட்டமிட்டுள்ளது. அதோடு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முக்கிய பரப்புரை களமாகவும் இந்த மாநாட்டை பயன்படுத்த திமுக முற்படுகிறது. 2006ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பிறகு முதன்முறையாக திமுகவின் இளைஞரணி மாநாடு நடைபெற்றது. அதன் வெற்றி ஸ்டாலினை திமுகவின் மிக முக்கிய மற்றும் வலுவான தலைவராக முன்னெடுத்ததில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபாணியில், உதயநிதிக்கான பட்டாபிஷேக நிகழ்ச்சியாக தான், சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாடு கருதப்படுகிறது.