விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. நல் உதாரணமாக இருங்க.. கொந்தளித்த MLA மார்க்கண்டேயன்!
சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட விஷயம் குறித்த கேள்விக்கு திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் காட்டமாக பதிலளித்துள்ளார்.

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என முதலமைச்சர் விஜய் தொடர்பான கேள்விக்கு திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பதிலளித்துள்ளார்.
விஜயை விமர்சித்த திமுக எம்.எல்.ஏ.
தூத்துக்குடி மாவட்டத்தின் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மார்க்கண்டேயன். இவர் கடந்த ஜூலை 20ம் தேதி கோவில்பட்டி அருகே நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் விஜயை குறிப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது சட்டமன்றத்தைப் பூட்டினால் எலும்புகளை உடைப்பேன் என மிரட்டல் விடுத்தார். இதனைத் தொடர்ந்து தவெக சார்பில் அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மார்க்கண்டேயனை கைது செய்தனர்.
கிட்டதட்ட 10 நாட்களுக்குப் பின் அவர் ஆகஸ்ட் 3ம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். இதன் பின்னர் முதலமைச்சர் விஜயைப் பற்றி பேசும்போது சகோதரர் விஜய் என்றும், அன்றைக்கு நடந்ததை மறந்து விடுமாறும் சட்டப்பேரவையில் உரையாற்றும்போது கேட்டுக் கொண்டார்.
முன்னுதாரணமாக இருங்கள்
சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு முதலமைச்சர் விஜயின் பெற்றோருக்கு அருகில் இடமளிக்கப்பட்டது. அது பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் இதனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த மார்க்கண்டேயன், “இந்த நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான வினா எழுப்பப்பட்டுள்ளது. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் வாழும் சந்ததியினருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பது கடமையாகும். இதுதான் இதற்கு என்னுடைய பதிலாகும்” என தெரிவித்தார்.
நயினார் எதார்த்தமாக தான் பேசினார்
தொடர்ந்து நயினார் நாகேந்திரன் முதலமைச்சர் விஜயின் குடும்பம் பற்றி பேசியதாக சர்ச்சையானது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, இந்த விஷயத்தில் நான் நாகரிகமாக தான் பேசினேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நான் அவரை சட்டமன்றத்தில் தான் பார்த்திருக்கிறேன். அங்கு அவர் நாகரீகமாக தான் பேசியுள்ளது. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை நயினார் நாகேந்திரன் பேசியது எதார்த்தமான கருத்துகள் தான்” என மார்க்கண்டேயன் கூறினார்.
தவெகவினர் என்ன புத்தரா?
இதனையடுத்து அதிமுக, பாஜகவினர் என்ன பேசினாலும் அவர்கள் மீது தவெக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. திமுக பேசினால் மட்டும் உடனடியாக வழக்கு பாய்கிறதே என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் சொன்ன மார்க்கண்டேயன், “மக்கள் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் கேள்விக்குறியாக மாற்றுவார்கள். அவங்க என்ன புத்தரா?” என கூறினார்.
ஏற்கனவே சமூக வலைத்தளங்களிலும் நடிகை த்ரிஷா சுதந்திர தின விழாவில் பங்கேற்றது கடும் சர்ச்சைகளை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்






















