Annamalai: ’பிரதமருக்கே பாதுகாப்பு வழங்க முடியாத திமுக அரசு’- அண்ணாமலை பரபரப்பு பேட்டி
பிரதமருக்கே பாதுகாப்பு வழங்க முடியாத அரசால் மக்களுக்கு எப்படிக் கொடுக்க முடியும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமருக்கே பாதுகாப்பு வழங்க முடியாத அரசால், சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கிண்டி ராஜ் பவனில் இன்று (நவம்பர் 29) நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது கோரிக்கை மனுக்களையும் அளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
''பிரதமர் மோடி பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட் விழாவின்போது சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வேலை செய்யவில்லை. பிரதமருக்கே பாதுகாப்பு வழங்க முடியாத அரசால் மக்களுக்கு எப்படிக் கொடுக்க முடியும்? இதுகுறித்து ஆளுநரிடம் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம். தமிழகத்தில் உள்துறை தூங்கிக் கொண்டிருப்பதாக ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம்.
செஸ் ஒலிம்பியாட் விழாவுக்கு வந்த பிரதமருக்கு சரியான பாதுகாப்பு வழங்கவில்லை - ஆளுநரிடம் தமிழக பாஜக புகார்https://t.co/wupaoCzH82 #Chennai #Annamalai #BJP #RNRavi #PMModi pic.twitter.com/HuN8LGjMVZ
— ABP Nadu (@abpnadu) November 29, 2022
ஆன்லைன் சூதாட்டம் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் திமுக அரசு தடுக்க வேண்டும். ஆன்லைன் ரம்மி தடை அவசரச் சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தாதது ஏன்? ஆளுநர் மீது பழிபோட்டு, மக்களை திமுக அரசு ஏமாற்றப் பார்க்கிறது.
வீடுகளுக்குக் குடிநீர் வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. துணை ராணுவப் படை வீரர் குருமூர்த்தி குறித்து ஆபாசமாகப் பேசிய கட்சிக் காரர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் லஞ்சம் அதிகரித்திருக்கிறது. சரியான சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதே ஆளுநரின் பணி. சட்டத்தின் மீதான சில சந்தேகங்கள் குறித்து மாநில அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் சாதாரண மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர். கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல் என சொல்லுவதற்குக் கூடத் தயங்குகின்றனர்.
ஆன்லைன் ரம்மி தடைக்கான மசோதா விவகாரத்தில் அனைத்து பழியையும் ஆளுநர் மேல் போட்டு திமுக அரசு தப்பிக்க முடியாது - அண்ணாமலைhttps://t.co/wupaoCzH82 | #Chennai #Annamalai #BJP #RNRavi #PMModi #Online #OnlineRummy pic.twitter.com/Dg99HFAczF
— ABP Nadu (@abpnadu) November 29, 2022
தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் அதிக அளவு கூடக்கூடிய இடங்களில் மெட்டல் டிடெக்டர் வேலை செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்''.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
ஆளுநர் பதவி காலாவதியான பதவி என திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கூறியது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர் கேட்டதற்கு பதில் அளித்த அண்ணாமலை, ''எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது சட்டை கிழிந்த நிலையில் மு.க.ஸ்டாலின் சந்தித்த முதல் நபர் ஆளுநர்தான். இதை கனிமொழி கவனத்தில் கொள்ள வேண்டும்'' என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
ஆளுநரைச் சந்திக்கும்போது கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்