Video : "தம்பி அண்ணாமலை..என்ன பதில் சொல்லப்போறீங்க” ... கனிமொழி எம்.பி கேள்வி.. வைரலாகும் வீடியோ
அண்ணாமலை தன் மீதான குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக ஆட்சியில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமொழி எம்.பி., தெரிவித்துள்ளார்.
கடந்த இரு தினங்களாக தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. ஒன்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும், அவர் தர்மத்திற்கு எதிரான தலைவர் என்றும் காயத்ரி ரகுராம் விமர்சித்திருந்தார்.
அதேசமயம் சென்னை விருகம்பாக்கம் அருகே கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. பிரபாகரராஜா ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் திமுக நிர்வாகிகள் அத்துமீறியதாக புகார் எழுந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிரவீன் ராஜா, ஏகாம்பரம் ஆகிய இருவரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். இதனையடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
View this post on Instagram
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது நான் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் ஒரு சிலர் அத்து மீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் நடைபெற்றபோது நான் பொதுக்கூட்டம் முடிந்து கிளம்பி விட்டேன். இந்த விஷயத்தினை தெரிந்ததும் முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார். திமுக ஆட்சியில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள்.
கூட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால் நடந்த சம்பவம் வெட்கப்பட வேண்டிய ஒன்று. நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று தான் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மற்றவர்களை குறை கூறி கொண்டிருக்கும் “தம்பி அண்ணாமலை” பற்றி பாஜகவில் இருந்து வெளியேறியுள்ள அம்மையார் ஒருவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். அதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்லப்போகிறார். என்ன நடவடிக்கைப் போகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.