Ponmudi: சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்! மீண்டும் அமைச்சராகிறாரா பொன்முடி?
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைதண்டனையை உச்சநீதிமன்ற நிறுத்தி வைத்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனைத் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு தண்டனையை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பு நிறுத்தி வைப்பு:
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினால் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடியிடம் இருந்து அந்த பொறுப்பு பறிக்கப்பட்டது. இதுமட்டும் இல்லாமல் பொன்முடி தனது சட்டமன்ற உறுப்பினர் அந்தஸ்தையும் இழந்தார். இதனால் பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட திருக்கோவிலூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளதால், பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ-வாக தனது இழந்த பொறுப்பை திரும்பப் பெறவும், இழந்த அமைச்சர் பொறுப்பை பெறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக திமுக எம்.பி வில்சன், “ தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொன்முடி இழந்த தனது எம்.எல்.ஏ பதவியை திரும்பப் பெறுவார்” என தெரிவித்துள்ளார்.
மீண்டும் எப்படி அமைச்சராக முடியும்?
முன்னாள் அமைச்சர் பொன்முடி தனது மேல் முறையீட்டு மனுவுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு நகலைக் கொண்டு தமிழ்நாடு சட்டமன்ற செயலகத்திடம் முறையிடலாம். இவ்வாறு முறையிடும்போது, சட்டமன்றச் செயலகம் பொன்முடியின் கோரிக்கையை பரிசீலித்து அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பை திரும்பக்கொடுக்க வாய்ப்புள்ளது.
இல்லையென்றால், உச்சநீதிமன்ற தீர்ப்பைக் காரணம் காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பை வழங்கலாம். அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பொன்முடி, தற்போது காலியாக உள்ள திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் முதலமைச்சரால் வழங்கப்பட்ட அமைச்சர் பொறுப்பை தக்கவைக்கலாம்.
ராகுல் காந்தி வழக்கு
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியை விமர்சித்ததை ஒட்டுமொத்தமாக மோடி என்ற சமூக மக்களை விமர்சித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனையை குஜராத் நீதிமன்றம் வழங்கியது. இதனால் ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பொறுப்பை இழந்தார். அதன்பின்னர் உச்சநீதிமன்றம், குஜராத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்திவைத்தது. இதனால் ராகுல்காந்தி தான் இழந்த மக்களவை உறுப்பினர் பதவியை திரும்பப் பெற்றார்.