Abdul Kalam : ”அப்துல்கலாம் இரண்டாம் முறையாக ஜனாதிபதியாவதை தடுத்தது திமுக” - அண்ணாமலை குற்றச்சாட்டு..!
இரண்டாவது முறையாக அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் ஆவதை திமுக தடுத்துவிட்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையிடமான கமலாலயத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச் செயலாளர் நாகராஜன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "அப்துல்கலாம் தமிழ்நாட்டுக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர்; விஞ்ஞானத்திற்கு பலம் சேர்த்தவர். இரண்டாவது முறையாக அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் ஆவதை சிலர் தடுத்தனர்; இதனை திமுகவும் தடுத்துவிட்டது. பா.ஜ.க கூட்டணியில் அதிமுக இருப்பதால் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று டெல்லியில் பிரதமர்ந மோடியை சந்தித்து பேசி உள்ளனர். ஆனால் அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலைவர்கள் தலையீடு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்ததற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணம்; இதனை நீதிமன்றத்தில் அவர்கள் எதிர் கொள்வார்கள். மீனவர் சட்ட மசோதாவிற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, "மீனவர் சட்ட மசோதாவில் குறைகள் இருந்தால் அதை பா.ஜ.க கவனத்தில் கொள்ளும்; தமிழ்நாட்டில் மீனவர்கள் கோரிக்கைகாக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார். ஆளுநர் மாளிகையில் விசிக, காங்கிரஸ் எம்.பிக்கள் மனு அளிக்க சென்றபோது புகைப்படம் எடுத்துக்கொள்ள மறுத்த நிலையில், உங்களோடு மட்டும் ஆளுநர் புகைப்படம் எடுத்துக்கொண்டதற்கு ஆளுநர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது தொடர்பான கேள்விக்கு, ’’தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒரு தலைப்பட்சமாக செயல்படவில்லை; தமிழக காங்கிரஸ் கட்சியினர் அரசியல் ரீதியாக குற்றச்சாட்டு வைக்கின்றனர்’’.
தமிழகத்தில் திமுகவினர் போலி சமூக நீதி பேசுவதாகவும், பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்து அவர் சார்ந்த சமூகத்தை பாஜக முன்னேற்றி இருக்கிறது; ஆனால் திமுகவில் இதுபோல் இல்ல; சிலரை வளரவிடுவதில்லை என குற்றம்சாட்டியுள்ள அண்ணாமலை, இஸ்லாமிய மக்களுக்கு அதிகமாக நிதியை மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது என்றார்.
பெகசஸ் உளவு மென்பொருள் மூலம் அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, செல்போன் ஒட்டுக்கேட்பு என்ற சர்ச்சை ஆதாரமில்லாதது ; இதனை திட்டமிட்டு நாடாளுமன்றத்தை காங்கிரஸ் முடக்கி இருக்கிறது என்றார்.