விஜயகாந்த் உடல்நிலையைக் குறித்த வதந்திகளை நம்பவேண்டாம் - தே.மு.தி.க அறிக்கை
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலம் சீராக இருப்பதாகவும், வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்றும் தே.மு.தி.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதனால், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக, பாதிக்கப்பட்ட விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில், நேற்று அதிகாலை திடீரென மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, விஜயகாந்த் உடல்நலம் சீராக இருப்பதாகவும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தே.மு.தி.க. தலைமை கழகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், விஜயகாந்தின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியானது. இதையடுத்து, தே.மு.தி.க. தலைமை கழகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே, பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.