Diwali 2025: தீபாவளி சிறப்பு பேருந்துகள்.. 8 லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம்..
சென்னையின் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களிலிருந்து வழக்கமான பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் மக்களுக்காக அரசு போக்குவரத்துத்துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்தது. இதன் தொடர்ச்சியாக, கடந்த அக்டோபர் 16 முதல் 19 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை, மொத்தம் 15,429 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு, 7,94,990 பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
தீபாவளி இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நீண்ட விடுமுறையை பயன்படுத்தி லட்சக்கணக்கான மக்கள் ரயில்கள், பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு திரண்டுள்ளனர். மக்களின் பயண வசதிக்காக அரசு 20,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்பட்டது
அதன்படி, வியாழக்கிழமை (அக்.16) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. சென்னையின் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களிலிருந்து வழக்கமான பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இத்துடன், இந்த நிலையங்களை இணைக்கும் வகையில் மாநகரப் பகுதியில் கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டன.
நான்கு நாட்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளதாகவும், மேலும் 3.59 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பாதுகாப்பாகவும் தங்குதடையின்றியும் பயணம் மேற்கொள்ளும் வகையில், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்த பணியில் ஈடுபட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் பதிவு:
மேலும் இது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் வெளியிட்டுள்ள பதிவில்
அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் மரியாதைக்குரிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் படி, இன்று (19.10.2025) கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் நான்காவது நாளாக நேரில் ஆய்வு மேற்கொண்டோம்.





















