Diwali 2022 Bonus: அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10 % தீபாவளி போனஸ்
சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு 10 விழுக்காடு போனஸ் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோடுக்கு 10 விழுக்காடு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு 10 விழுக்காடு போனஸ் அறிவித்துள்ளது.
தீபாவளிக்கு இன்னும் ஒன்பது நாள்களே உள்ள நிலையில் முன்னதாக இந்த ஆண்டுக்கான தீபாவளி போனஸை வழங்கக் கோரி பொதுத்துறை நிறுவனங்களில் செயல்படக் கூடிய தொழிற்சங்கங்கள் அந்தந்த நிர்வாகங்களிடம் கோரிக்கை வைத்து வந்தன.
இந்நிலையில் அரசு முன்னதாக வெளியிட்டுள்ள ஆணையில், ”அரசாங்கம் பல்வேறு அம்சங்களை கவனமாக பரிசீலித்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோயின் பாதகமான தாக்கம் மற்றும் அதன் பொருளாதார விளைவுகள் அரசாங்கத்தின் வளங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் வணிக நடவடிக்கைகள் மற்றும் செயல்பாட்டைத் தொடர்ந்து சீர்குலைத்துள்ளன (ஆ) அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் ( அரசுப் போக்குவரத்து நிறுவனங்கள் உள்பட) அவற்றின் செயல்பாட்டு வருமானம் கணிசமாகக் குறைந்தாலும், எந்தவிதமான ஊதியக் குறைப்பு முதலியவற்றை விதிக்காமல் முழுச் சம்பளம், ஊதியங்களை வழங்கியது.
கோவிட்-19 பூட்டுதல் கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் 2021-22 ஆம் ஆண்டில் 57 நாட்கள் பேருந்துகள் இயக்கப்படாவிட்டாலும், அனைத்து அரசுப் போக்குவரத்து நிறுவனங்களும் வங்கிகள்/நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கின.
அதன்படி, மாநில பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 2022-23ஆம் ஆண்டில் செலுத்த வேண்டிய 2021-22ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையை வழங்குவதற்காக அரசு பின்வரும் ஆணைகளை வெளியிடுகிறது:
அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'சி மற்றும் டி' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க மத்திய அரசு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்தது. தற்போது கடந்த ஆண்டைப் போலவே நடப்பு ஆண்டு தீபாவளிக்கும் 10 சதவிகித தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.