கரூர் : கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது - மாவட்ட ஆட்சியர் தகவல்
கரூர் மாவட்டத்தில் 1,05,408 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்
கரூர் மாவட்டத்தில் இதுவரை 18,015 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 14,150 நபர்கள் குணமடைந்துள்ளனர். தற்போது 3,526 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில் 697 நபர்களும், தனியார் மருத்துவமனைகளில் 552 நபர்களும், கொரோனா பாதுகாப்பு மையத்தில் ( CCC ) 260 நபர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர் . 1,117 நபர்கள் மருத்துவ உதவிகளுடன் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சிகிச்சை முடித்து 205 பேர் வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பரிசோதனை 01.04.2021 முதல் இன்று வரை 1,02,168 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதுமான அளவில் ஆக்ஸிஜன் இருப்பில் உள்ளது. கரூர் மாவட்டத்தில் ஊரடங்கின் போது விதிமீறலில் ஈடுபட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது மொத்தமாக ரூ.69,86,900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் 1,05,408 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், போதுமான அளவில் தடுப்பூசி மருந்துகள் இருப்பில் உள்ளது. பொதுமக்கள் அரசால் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கை முழுவதுமாக கடைபிடித்து , அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியில் செல்வதை தவிர்த்து , அரசால் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறும், பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் சுற்றுவதை தவிர்க்கவேண்டும் எனவும், முழு ஊரடங்கை கடைபிடிக்காமல் அவசியமின்றி வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்படி நகரின் முக்கிய இடங்களில் நாள்தோறும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு என பிரத்யேகமாக குறிப்பிட்ட இடங்களில் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
மாவட்ட ஆட்சித்தலைவர் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆலோசனைக்கு இணங்க பல்வேறு இடங்களில் நேரடியாக சென்று ஆக்சிஜன் உடன் கூடிய கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு, பிரத்யேகமாக மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக தமிழ்நாடு காகித ஆலை நிறுவனங்கள் வழங்கியுள்ள கொரோனா சிறப்பு வார்டு அமைந்த பகுதிகளை நாள்தோறும் கண்காணித்து வருகிறார். அதைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக நாள்தோறும் நிதிகளை வழங்கி வருகின்றனர்.