Pa.Ranjith : "இது சாதிய மனநிலை.." : ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கண்டனம் தெரிவித்த இயக்குநர் பா.ரஞ்சித்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய திரையுலகின் மிகவும் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா. இவர் பல மொழிகளிலும் சேர்த்து 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கென்று கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளையராஜா பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசினார். அவரது கருத்துக்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அவருக்கு தமிழக பா.ஜ.க. மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை ஆகியோர் ஆதரவு அளித்தனர்.
இந்த நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பணமும், புகழும் வந்த உடன் உங்களை உயர்ந்த ஜாதி என்று நினைத்துக் கொள்கிறீர்களா? என்று இளையராஜாவிற்கு கண்டனம் தெரிவித்து பேசினார்.
'பணமும் புகழும் வந்த உடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறார்களே' என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி. வீரமணி கைதட்டுவதும் இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா..? இந்த சாதிய மனநிலை அதுவும் பெரியார் மேடையில் நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்தக்கது. pic.twitter.com/kPo9AudLIU
— pa.ranjith (@beemji) April 23, 2022
அவரது பேச்சுக்கு திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில், பணமும் புகழும் வந்த உடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறார்களே' என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி. வீரமணி கைதட்டுவதும் இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா..? இந்த சாதிய மனநிலை அதுவும் பெரியார் மேடையில் நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்தக்கது என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், பலரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாதியை கூறி இளையராஜாவை கண்டித்ததற்கும், அதற்கு ஆதரவாக கி.வீரமணி கைதட்டியதற்ககும் கண்டனங்களை சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பா. ரஞ்சித் அட்டகத்தி என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். பின்னர், மெட்ராஸ், கபாலி, காலா என்ற படங்களை இயக்கினர். கடைசியாக அவர் இயக்கிய சார்பட்டா படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. பா.ரஞ்சித் எப்போதும் சமூக பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்