'வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்..' - முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் பாலா..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரபல திரைப்பட இயக்குநர் பாலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து கடந்த 7-ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அதன்பின்னர் அவர் தலைமையிலான புதிய அரசு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் நோய் பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா நடவடிக்கை தொடர்பாக நாளை முதல் ஆய்வுசெய்ய 14 மாவட்டங்களுக்கு அமைச்சர்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புதிய அரசு பதவி ஏற்றவுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பிரபல திரைப்பட இயக்குநர் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அதில், "தேவையற்ற வாழ்த்துரைகளை தவிருங்கள் என்று கேட்டு கொண்டீர்கள். ஆனாலும் இதைத் தவிர்க்க முடியவில்லை. தங்களின் ஆற்றல், செயல் மற்றும் பண்பான நடவடிக்கைகள் மனித நாகரிகத்தின் உச்சம். நன்றிகள்" எனத் தெரிவித்துள்ளார். மேலும் அப்பதிவில் ஒரு திருக்குறளையும் மேற்கோள் காட்டி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
— Director Bala (@IyakkunarBala) May 9, 2021
"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனாக்கி வாழுங் குடி" என்ற திருக்குறளையும் மேற்கோள் காட்டி இயக்குநர் பாலா தனது வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.