Crime: ஏற்கனவே 4 பொண்டாட்டி.. 5வதாக ஒரு பெண்ணுடன் தொடர்பு.. கொலையில் முடிந்த கள்ளக்காதல்!
வட்டமலை அணைப்பகுதியில் கடந்த டிசம்பர் 6ம் தேதி ஒரு பெண் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வெள்ளக்கோவில் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

திருப்பூரில் கொலை செய்யப்பட்ட திண்டுக்கல் பெண்ணின் மரணத்தில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகியுள்ளது. இதனைப் பற்றி நாம் காணலாம்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே உத்தமப்பாளையம் என்ற ஊர் உள்ளது. இங்கிருக்கும் வட்டமலை அணைப்பகுதியில் கடந்த டிசம்பர் 6ம் தேதி ஒரு பெண் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வெள்ளக்கோவில் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்துச் சென்ற காவல்துறையினர் பெண்ணின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதில் இறந்தது திண்டுக்கல் மாவட்டம், நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த வடிவுக்கரசி என்பது தெரிய வந்தது. அவரை அப்பகுதிக்கு அழைத்து வந்தது அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரியான சங்கர் தான் என்பதும் கண்டறியப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தினால் கொலைக்கான உண்மையான காரணம் தெரியும் என போலீசார் முடிவு செய்து பல இடங்களிலும் தேடியுள்ளனர். ஆனால் அவர் எஸ்கேப் ஆகி தலைமறைவாக இருந்தார். இறுதியாக தாராபுரத்தை அடுத்திருக்கும் அலங்கியம் என்ற பகுதியில் மறைந்து வாழ்ந்த நிலையில் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார்.
ஏற்கனவே 4 மனைவிகள்
சங்கர் தமிழக காவல்துறையில் பணியாற்றி 1998ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றவர். ஏற்கனவே இவருக்கு 4 மனைவிகள் இருந்துள்ளனர். அவர்கள் மூலம் 3 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். இப்படியான நிலையில் சங்கருக்கு வடிவுக்கரசியுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இருவரும் சேர்ந்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளனர். ஆனால் அவற்றையெல்லாம் செலவழித்துவிட்டு சொன்னதுபோல வேலை வாங்கி தரவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் மிகுந்த நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வடிவுக்கரசி, சங்கரை தொடர்பு கொண்டு பணம் கேட்க இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட தொடங்கியுள்ளது. தனக்கு எழுந்த அழுத்தம் காரணமாக வடிவுக்கரசி சங்கரை கடுமையாக டார்ச்சர் செய்துள்ளார். இதனால் அவரை எப்படி சமாளிப்பது என தெரியாமல் சங்கர் விழிபிதுங்கியுள்ளார்.
டார்ச்சால் நிகழ்ந்த கொலை
இந்த நிலையில் அவர் வடிவுக்கரசியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி தன்னுடைய முதல் மனைவி ஊரான வெள்ளக்கோவில் அருகே இருக்கும் தாசநாயக்கன்பட்டியில் எனக்கு ஒருவர் பணம் தர வேண்டும். நீயும் வா, நாம் போய் வாங்கி வரலாம் என வடிவுக்கரசியை சங்கர் அழைத்துச் சென்றார். வரும் வழியில் வட்டமலை அணைப்பகுதியில் இருவரும் சென்று மது அருந்திய நிலையில் மீண்டும் பண பிரச்னை வெடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சங்கர், வடிவுக்கரசியை கருங்கல்லை எடுத்து தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதன் பின்னர் அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையை எடுத்த சங்கர், அடையாளம் தெரியாமல் இருக்க அவர் முகத்தை சிதைத்து தீ வைத்து கொளுத்தியுள்ளார். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















