DIG Vijayakumar Suicide : இவரா தற்கொலை செய்துகொண்டார்..! விஜயகுமார் IPS-யின் மீள் பதிவு.. ஒரு ஃப்ளாஷ்பேக்..
விஜயகுமார் IPS-யின் பழைய பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. தனியார் இதழுக்கு பேட்டியளித்த அவரது நம்பிக்கையான வரிகள் அனைவரையும் கண்கலங்க வைக்கிறது.
![DIG Vijayakumar Suicide : இவரா தற்கொலை செய்துகொண்டார்..! விஜயகுமார் IPS-யின் மீள் பதிவு.. ஒரு ஃப்ளாஷ்பேக்.. DIG Vijayakumar Suicide today shocking incident vijayakumar old post how to crack ips exam DIG Vijayakumar Suicide : இவரா தற்கொலை செய்துகொண்டார்..! விஜயகுமார் IPS-யின் மீள் பதிவு.. ஒரு ஃப்ளாஷ்பேக்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/07/fa3a7448430cc7d37b7233a30b3e57411688731542564572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஜயகுமார் IPS-யின் பழைய பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இவரின் நம்பிக்கையான வரிகள் அனைவரையும் கண்கலங்க வைக்கிறது. தனியார் இதழுக்கு விஜயகுமார் அளித்த பேட்டியானது, தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐ.பி.எஸ் பதவி
”தேனி மாவட்டம் அணைக்கரைப்பட்டி தான் என் சொந்த ஊர். அப்பா செல்லையா வி.ஏ.ஓவின் அம்மா ராஜாத்தி பள்ளி ஆசிரியை” என பேச ஆரம்பித்திருக்கிறார் விஜயகுமார். ”ப்ளஸ் டூ வரை தமிழ் வழிக் கல்வியில்தான் படிச்சேன். ஒரே மகனான என்னை டாக்டர் இல்லேன்னா, இன்ஜினீயர் ஆக்கிப் பார்க்க அவங்களுக்கு ஆசை. மெக்கானிக்கல் இன்ஜினீயர் ஆயிட்டேன். சாதாரண கடைநிலை ஊழியரான அப்பாவைப் பார்த்துப் பார்த்தே வளர்ந்ததால், மாவட்ட அளவு அதிகாரம் படைத்த ஓர் அரசு அதிகாரி ஆகணும்னு அடிக்கடி மனசுல தோணிட்டே இருக்கும்” என அந்தப் பேட்டியில் தெவித்திருக்கிறார் விஜயகுமார்
”அது போக, போடி கலவரம், தேவாரம் கலவரம், கஞ்சா விவசாயம்னு எங்க பகுதியில் எல்லாப் பக்கமும் க்ரைம்தான். போலீஸ் அதிகாரியானால் நம்மால் முடிஞ்ச உதவியை மக்களுக்குச் செய்யலாம்னு தோணும். 'மாவட்ட அளவிலான போலீஸ் அதிகாரி’ என்ற என் இரண்டு ஆசைகளையும் பூர்த்திசெய்வது ஐ.பி.எஸ்., பதவி மட்டும்தான்னு தெரிஞ்சுக் கிட்டேன். அந்தத் திசையில் பயணிக்கத் தொடங்கினேன்” என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்
ரூ.1,000 சம்பளத்தில் வேலை
கல்லூரிப் படிப்பு முடிந்து சரியான வேலை அமையாததால், ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு ஜெராக்ஸ் எடுக்கிற வேலையில் சேர்ந்து வேலை செய்திருக்கிறார் விஜயகுமார். 12 மணி நேர வேலைப்பளுவில் படிக்க முடியாததால் நான்கு மாதத்தில் வேலையையும் விட்டிருக்கிறார்
ஏதாவது ஓர் அரசு வேலையில் சேர்ந்து படிக்க முடிவு செய்தவர், 1999-ல் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்து படித்திருக்கிறார். அதில் தோல்வி. அதே சமயத்தில் குரூப்-2 தேர்வுக்கும் விண்ணப்பித்து, அந்தத் தேர்வுக்கு ஆறு மாதம் தீவிரமாக படித்திருக்கிறார். 2000-ல் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையில் ஆடிட் இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்திருக்கிறார். அதே வருடம் குரூப்-1 தேர்வும் எழுதியிருக்கிறார். முதற்கட்டம், மெயின், நேர்முகத் தேர்வு என்று இரண்டு வருட நடைமுறை முடிந்து, 2002-ல் ரிசல்ட் வந்திருக்கிறது. தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி., ஆகியிருக்கிறார்.
6 இடங்களுக்கு டிரான்ஸ்ஃபர்
தொடர்ந்து சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முயற்சிகள். அடுத்தடுத்து ஆறு தடவை முயற்சிகள். நான்கு முறை மெயின் தேர்வு வரையிலும், மூன்று முறை நேர்முகத் தேர்வு வரையும் சென்றிருக்கிறார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஏழு முறை தேர்வு எழுத முடியும். அது அவரது கடைசி ஏழாவது முயற்சியாக இருந்திருக்கிறது. வெற்றி பெற்றிருக்கிறார்! ”தேர்வுக்கான ஆயத்தங்களைக் காட்டிலும் அந்த காலகட்டங்களில் நான் கடந்து வந்த மன உளைச்சலின் வீரியம் வார்த்தையில் அடங்காது. டி.எஸ்.பி-யாக நான் பணிபுரிந்த ஆறு ஆண்டுகளில் ஈரோடு, திருவள்ளூர், சி.பி.சி.ஐ.டி., சென்னை கமிஷனர் அலுவலகம், ஆவடி உட்பட ஆறு இடங்களுக்கு என்னை டிரான்ஸ்ஃபர் செய்தார்கள். காரணம், சிவில் சர்வீசஸ் தேர்வு” என குறிப்பிட்டிருக்கிறார்
”இன்டர்வியூ போகணும்... மெயின் எக்ஸாமுக்குப் படிக்கணும்... ஒரு மாசம் லீவு வேணும்” என்று கேட்டால், உடனே ஒரு டிரான்ஸ்ஃபர் பரிசாகக் கிடைக்கும் என குறிப்பிட்டவர், வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் முழு நேரமும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு மட்டுமே படித்துக்கொண்டு இருந்தால், நிச்சயம் முதல் இரண்டு முயற்சிகளிலேயே யாருக்கும் வெற்றி நிச்சயம் என நம்பிக்கை டானிக் கொடுத்திருக்கிறார்.
சிவில் சர்வீசஸ் விண்ணப்பத்தில் விருப்பப் பணியில் 'ஐ.பி.எஸ்’ என்று மட்டுமே எழுதினேன். ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ். பிரிவின் கீழ் 0 என்றே குறிப்பிட்டு இருந்தேன்.
"இதுவே போதும் என்று எங்கேயும் தேங்கிவிடாதீர்கள்”
”எப்பதான் பாஸ் பண்ணப்போற”?ன்னு கேட்பார்கள். சில உறவினர்கள் கிண்டல் அடிக்கக்கூடச் செய்வார்கள். எந்தச் சூழலிலும் சோர்ந்து போகவே கூடாது. நேர்மறை எண்ணம்கொண்டவர்களை மட்டுமே பக்கத்தில் சேருங்கள். வீட்டில் எவ்வளவு சிரமம் இருந்தாலும், அதைத் தாங்கிக்கொண்டு வேறு வேலைக்குச் செல்லாமல் ஒரே லட்சியத்தோடு படித்தால் நலம். குரூப்-2, குரூப்-1 என கொஞ்சம் தடம் மாறியதால்தான் என் வெற்றி தள்ளிப்போனது. 'இதுவே போதும்’ என்று எங்கேயும் தேங்கிவிடாதீர்கள். ஓடிக்கொண்டே இருங்கள். வெற்றி உங்களைப் பின் தொடரும்!'' என்று தனியார் இதழ் ஒன்றுக்கு அளித்த தனது பேட்டியில் பதிவில் விஜயகுமார் பதிவிட்டுள்ளார்.
டி.ஐ.ஜி.யாக விஜயகுமார் தற்கொலை!
கோவை சரக டி.ஐ.ஜி.யாக விஜயகுமார் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவரது முகாம் அலுவலகத்தில் இன்று காலையில் விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இன்று காலை 6.50 மணியளவில் நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்தபோது, அவருடைய மெய் பாதுகாவலர் ரவி என்பவரிடம் கை துப்பாக்கியை வாங்கி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)