Minister Periyasamy Vs Amutha I.A.S: ’நான் அமைச்சரா இல்லை அமுதா ஐ.ஏ.எஸ் அமைச்சரா?’ டென்ஷனான I.P. – கோபத்துடன் ஊருக்கு கிளம்பினாரா..?
அமைச்சர் ஐ.பெரியசாமி, ’ஒன்று என்னை மாற்றுங்கள் ; இல்லையென்றால் என் துறையில் இருந்து அமுதா ஐ.ஏ.எஸ்-ஐ மாற்றுங்கள்’ என முதல்வரின் செயலர் -3 சண்முகத்திடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
கட்சியிலும் அமைச்சரவையிலும் சீனியரான தன்னை துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் மதிப்பதில்லை, துறை சார்ந்த செயல்பாடுகளை தன்னுடைய கவனத்திற்கு கொண்டுவருவதில்லை என்று மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கோபித்துக்கொண்டு ஊருக்கு கிளம்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகி கோட்டை வட்டாரத்தை பரபரப்பாக்கியிருக்கிறது.
முதலில் அதிருப்தி இப்போது அமுதா - சமாளிப்பாரா ஐபி?
திமுக ஆட்சி அமைந்ததும் தனக்கு பெரிய துறை கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ஐ.பெரியசாமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தன்னுடைய ஜூனியரான சக்கரபாணிக்கு உணவுத்துறையை கொடுத்துவிட்டு, தனக்கு அந்த துறையை சார்ந்த செயல்பட வேண்டிய கூட்டுறவுத்துறையை கொடுத்ததில் இருந்தே ஐ.பெரியசாமி அதிருப்தியில் இருந்தார். அதனால் அரசு ஒதுக்கிய பங்களாவிற்கு கூட செல்லாமல் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலிலேயே தங்கி பணிகளை பார்த்து வந்தார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியாக நடந்த அமைச்சரவை மாற்றத்தில் பெரியகருப்பன் வகித்த ஊரக வளர்ச்சித் துறையை ஐ.பெரியசாமிக்கும் பெரியசாமி வசம் இருந்த கூட்டுறவுத்துறையை பெரியகருப்பனுக்கும் மாற்றிக் கொடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக aஉள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான அமுதா ஐ.ஏ.எஸ், துறையை முழுக்க முழுக்க தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டதாகவும், ஊழியர்கள் பணியிடமாற்றம் தொடங்கி பணிகள் வரை எந்த தகவலையும் அமைச்சருக்கு முறையாக அவர் சொல்வதில்லை என்றும் ஐ.பி. ஆதரவாளர்கள் புலம்பத் தொடங்கினர். அந்த புலம்பல் நீடித்து, தற்போது அமைச்சருக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்க்கும் முட்டல் மோதல் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
உதயநிதியிடம் நற்பெயர் எடுக்க முயற்சியா?
உதயநிதி ஸ்டாலினிடம் நற்பெயரை எடுக்க வேண்டும் என்பதற்காக, ஊரக வளர்ச்சித் துறையில் திட்டமிட்டு, ஏதேனும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதனை உதயநிதியை வைத்து நடத்துவதை அமுதா ஐ.ஏ.எஸ் வாடிக்கையாக வைத்திருப்பதாகவும் அவரை புகழ்வதையும் அறிவுறுத்தல் வழங்குவதையுமே தன்னுடைய முழு நேர பணியாக அமுதா வைத்திருப்பதாகாவும் அமைச்சர் ஐ.பி ஆதரவாளர்கள் கோட்டை வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.
சமீபத்தில் கூட, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டமான HCL-ஐ செயல்படுத்த அரசு மற்றும் HCL அறக்கட்டளை இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. ஆனால், இந்த நிகழ்ச்சி பற்றி அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல் உதயநிதி ஸ்டாலினை அழைத்து அவர் தலைமையில் அமுதா ஐ.ஏ.எஸ் திட்டத்தை செயல்படுத்த கையெழுத்திட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையறிந்த அமைச்சர் ஐ.பெரியசாமி, ’ஒன்று என்னை மாற்றுங்கள் ; இல்லையென்றால் என் துறையில் இருந்து அமுதா ஐ.ஏ.எஸ்-ஐ மாற்றுங்கள்’ என முதல்வரின் செயலர் -3 சண்முகத்திடம் சொல்லி, கோபித்துக்கொண்டு ஊருக்கு கிளம்பி சென்று விட்டதாகவும் தலைமைச் செயலகத்தில் இருந்து தகவல் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மாற்றப்படுகிறாரா அமுதா ஐ.ஏ.எஸ்..?
விரைவில் வரும் என எதிர்பார்க்கக் கூடிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றத்தில் அமுதா ஐ.ஏ.எஸ் பெயரும் இடம்பெற வாய்ப்புள்ளதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் ஊரக வளர்ச்சித் துறை என்பது மிக முக்கியமான துறை என்பதால் ஒவ்வொரு திட்டங்களையும் செயல்படுத்தும் முன்னும் பின்னும் அமுதா ஐ.ஏ.எஸ் மிகுந்த பொறுப்புடனும் கவனத்துடன் எந்த பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்ற மெனக்கிடலுடனும் செயல்படுவதாகவும் அமைச்சருக்கு சொல்ல வேண்டியதை அவர் எந்த இடத்திலும் சொல்லாமல் தவிர்க்கவில்லையென்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இன்னும் பழைய பஞ்சாங்கத்தையே அமைச்சர் ஐ.பெரியசாமி பாடிக்கொண்டிருப்பதால் டெக்னாலாஜியோடு சேர்ந்து செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்த புரிதல் அவரிடம் இல்லாததால் வேறு வழியின்றி அமுதா ஐ.ஏ.எஸ்-சே அதனை எடுத்து செயல்படுத்த வேண்டியிருக்கிறது என்கின்றனர்.
இருந்தாலும் மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டு அமைச்சர் ஆகியுள்ளவர்களை அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள் மதித்து செயல்பட வேண்டும் என்ற குரல்களும் தலைமைச் செயலகத்தில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன.