North Indians Safety: வடமாநில தொழிலாளர்களுக்கு என்ன பிரச்சனை? உண்மை களநிலவரம் என்ன?
பீகார் இளைஞர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாகவும், பலர் கொல்லப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் தீயாக பரவிவருவது உண்மையில்லை என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
பீகார் இளைஞர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாகவும், பலர் கொல்லப்படுவதாகவும் வட இந்திய மாநிலங்களில் சமூக வலைதளங்களில் தீயாக பரவிவருவது உண்மையில்லை என்றும் அதனை யாரும் நம்பி அச்சப்பட வேண்டாம் என்றும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. அதோடு, இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தீயாய் பரவிய பொய்
முகமது தன்வீர் என்பவர் பீகார் மாநிலத்தவர் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாகவும், சிலர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி சில வீடியோக்களை பதிவேற்றம் செய்திருந்தார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிய நிலையில் அது குறித்த உண்மைத் தன்மையை ஆராய்ந்த போது, கோவை நீதிமன்ற வளாகத்தில் சமீபத்தில் நடந்த கொலையில் பீகாரைச் சேர்ந்தவர் கொல்லப்பட்டதாகவும் , திருப்பூரில் இரண்டு பீகார் குழுக்கள் இடையே நடைபெற்ற மோதலை தமிழ்நாட்டவர் பீகாரிகள் இடையே நடந்த மோதல் போன்றும், மகாராஷ்டிரா, கர்நடாகாவில் நடந்த சம்பவங்களை தமிழ்நாட்டில் நடைபெற்றது போலவும் சித்தரித்து முகமது தன்வீர் வெளியிட்டிருந்தார்.
கவனத்திற்கு வந்ததும் களத்தில் இறங்கிய பீகார் முதல்வர்
இந்த வீடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ட்வீட் செய்திருந்தார். அதில், தமிழ்நாட்டில் பீகார் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக செய்திகளில் வெளியாகியிருந்ததைப் பார்த்து தெரிந்துகொண்டேன் என்ரும் தமிழ்நாடு காவல்துறையினரிடம் பேசி பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளேன் எனவும் கூறியிருந்தார்.
மறுப்பு தெரிவித்த தமிழ்நாடு டிஜிபி
இது தொடர்பாக காணொலி வெளியிட்டிருந்த தமிழ்நாடி டிஜிபி சைலேந்திரபாபு, சமூக வலைதளங்களில் போலியான வீடியோக்கள் பரப்பப்படுகின்றன என்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படவில்லை எனவும், இங்கே மக்கள் சமூக ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார். அதோடு, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாகவும் தவறான செய்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனாலும், தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தொடர்ந்து போலியான வீடியோக்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில்,. அபிராஜ் சிங் ராஜ்புட் என்பவரும் தொடர்ந்து வதந்தி பரப்பும் விதத்தில் வீடியோக்களை பரப்பி வருகிறார் என்று பலரும் சமூக வலைதளங்களில் குற்றஞ்சாட்டி வருகின்றனர். உடனடியாக இவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விஸ்பரூபம் எடுத்த விவகாரம் – குழு அமைத்த பீகார் அரசு
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பீகார் சட்டமன்றத்தில் இதுபற்றி எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர். அனைத்துக்கட்சிக் குழுவை தமிழ்நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்கட்சிகள் விடுத்த கோரிக்கையை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து, பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்ய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக்கட்சிக்குழு இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளது.
இதனிடையே இது தொடர்பாக விளக்கமளித்துள்ள பீகார் மாநில தலைநகர் பாட்னா ஏடிஜி ஜே.எஸ்.கங்வார், தமிழ்நாட்டில் பீகார் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பகிரப்படும் வீடியோ போலியானது என்றும் பீகார் தொழிலாளர்களுக்கு, தமிழ்நாடு காவல்துறை முறையான பாதுகாப்பு அளித்து வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு டிஜிபியுடன் பீகார் டிஜிபி பேசியுள்ளார். தொடர்ந்து இரு மாநில உயர்நிலை அதிகாரிகளும் தொடர்பில் உள்ளனர். என்றும் அவர் கூறியுள்ளார்.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர்
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கனேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தி மற்றும் தமிழ் மொழியில் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், தமிழ்நாட்டுக்கு வருபவர்களை நேசக்கரம் கொண்டு வரவேற்பதுதான் தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் நடைமுறை. விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற தமிழ்நாட்டு மக்களும், தொழிலாளர் நலன் காக்கும் தமிழ்நாடு அரசும் இந்த உடலுழைப்பு தொழிலாளர்களின் பங்களிப்பை நன்கு உணர்ந்து இருப்பதால், இணக்கமான, அமைதியான சூழ்நிலையில் இங்கு அனைவரும் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தச்சூழ்நிலையில் சில சமூக வலைதளங்களில் உண்மைக்கு மிகவும் மாறான, தவறான உள்நோக்கத்தோடு, வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சில இடங்களில் தாக்கப்படுவதாக விஷமத்தனமான செய்தி சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதை தமிழ்நாட்டில் இருக்கும் வடமாநிலத்தவர் உள்ளிட்ட அனைவரும் அறிவார்கள். தொழில் அமைதிக்கும், சமூக அமைதிக்கும் எப்போதும் பெயர்பெற்று விளங்கும் தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாக செய்தி பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
ஹோலி பண்டிக்கைக்காகவே ஊருக்கு செல்லும் வடமாநிலத்தவர்
இந்நிலையில், வட மாநிலத்தவர் தங்கள் சொந்த ஊருக்குச் செல்லத்தொடங்கியுள்ளனர் என்று செய்திகளில் வெளியான நிலையில், ஹோலி பண்டிகைக்காகவே தாங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்வதாக, திருப்பூரில் வசிக்கும் பீகார் தொழிலாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
திருப்பூர் எஸ்.பி. வெளியிட்ட வீடியோ
திருப்பூர் எஸ்பி சஷாங்க் சாய் வெளியிட்டுள்ள அந்த காணொளியில், “நாங்கள் தமிழ்நாட்டில் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம். தமிழ்நாடு அரசு எங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கிறது. காவல்துறையினர் எங்களுக்கு பாதுகாப்பாக உள்ளனர். ஹோலி பண்டிகை என்பதால் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கின்றனர். பண்டிகை முடிந்ததும் திரும்ப வந்துவிடுவார்கள். எங்கள் மிது தாக்குதல் நடத்தப்படுவதாக பரவும் செய்தி உண்மைக்குப் புறம்பானது” பீகார், உத்தரபிரதேச மாநில தொழிலாளர்கள் என்று கூறியுள்ளனர்.