MK Stalin: ’தீரன் சின்னமலை பெயரைச் சொன்னாலே உணர்ச்சியும் எழுச்சியும் வருகிறது’- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
திருப்பூரில் திமுக ஆட்சிக் காலத்தில்தான் 2 மகளிர் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. பெண்கள் உயர் கல்வி கற்க வேண்டும். அதற்காகவே உயர் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தீரன் சின்னமலையின் பெயரைச் சொன்னாலே உணர்ச்சியும் எழுச்சியும் வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டிடத்தை காணொலிக்காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்து, சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
’’கொங்கு வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் சமுதாயமாக அறிவித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தீரன் சின்னமலை பெயரைச் சொன்னாலே உணர்ச்சியும் எழுச்சியும் வருகிறது. திருப்பூரில் திமுக ஆட்சிக் காலத்தில்தான் 2 மகளிர் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
வீட்டிற்கொரு பட்டதாரி
பெண்கள் உயர் கல்வி கற்க வேண்டும். அதற்காகவே உயர் கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில், திரும்பிய பக்கமெல்லாம் கல்லூரிகள் உள்ளதால், வீட்டிற்கொரு பட்டதாரி உள்ளனர். தமிழக மாணவர்கள் உலகெங்கும் சென்று சாதிக்க வேண்டும்.
தீரன் சின்னமலை பெயரில் கல்லூரி அமைக்க 26 ஏக்கர் நிலம் வாங்கியும் அனுமதி கிடைக்காமல் இருந்தது. கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், இதே மேற்கு மண்டலத்திலிருந்து 9 பேர் அமைச்சர்களாக இருந்தும் அனுமதி கிடைக்கவில்லை. கல்லூரி கட்டியதறகாக இந்த நிலத்தின் வகையை கூட மாற்றிக்கொடுக்கவில்லை.
நம்முடைய திமுக ஆட்சி வந்த பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், தீரன் சின்னமலை கல்லூரி தொடர்பான அறக்கட்டளை நிர்வாகிகளை எல்லாம் அழைத்துக்கொண்டு வந்து இந்தக் கோரிக்கையை என்னிடத்தில் வைத்தார். நான் நேரடியாக கண்காணித்து, நில “வகை'-யை மாற்றிக்கொடுத்து கல்லூரி கட்டுவதற்கு இருந்த முதல தடையை நீக்கினேன். பிறகு, உயர்கல்வித் துறை அனுமதி, கட்டடஅனுமதி எல்லாவற்றையும் வழங்க ஆணையிட்டு- அதையும் நிறைவேற்றிக் கொடுத்தோம்.
நேரில் வந்து திறந்து வைக்க ஆசை
இன்றைக்கு இந்தப் பகுதியில் இருக்கின்ற பெண்களுக்கான கல்லூரியாக இது மாறியிருக்கிறது. இதை நேரில் வந்து திறந்து வைக்கவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால், என்னுடைய உடல்நிலை காரணமாக, நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவேண்டும் என்று மருத்துவர்கள் கண்டிப்பாகச் சொல்லிவிட்டதால், காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைத்திருக்கிறேன்.
நான் மட்டுமல்ல, முத்தமிழறிஞர் கலைஞரும் கொங்குப் பகுதி மக்களுக்காக நிறைய பாடுபட்டார். இதே மாதிரி, செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரிக்கு, சுப்பராயன் கோரிக்கையை ஏற்று அனுமதி கொடுத்தார். அப்போது இது ஒன்றுபட்ட கோவையாக இருந்தது. எனவே, தி.மு.க ஆட்சியில்தான் இந்தப் பகுதிக்கு இரண்டு பெண்கள் கல்லூரிகள் வந்திருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சி
இப்படி இந்தப் பகுதி வளரவும், இந்தப் பகுதி மக்கள் முன்னேறவும் - பெண்களுடைய கல்வி முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டு வருவதுதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி.
ஒரு காலத்தில் கல்வி என்பது எல்லாருக்கும் எளிதாகக் கிடைத்துவிடவில்லை. எட்டாக்கனியாக இருந்த கல்வி, இன்றைக்கு எல்லாருக்கும் கிடைக்கிறது என்றால், அதற்குப் பின்னால் ஏராளமான போராட்டங்கள் இருக்கிறது’’.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.