Cyclone Montha: சென்னைக்கு 480 கி.மீட்டர் தொலைவில் மோன்தா.. காத்திருக்கு கனமழை - தமிழகத்தில் எங்கெல்லாம்?
மோன்தா புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில், சென்னைக்கு 480 கி.மீட்டர் தொலைவில் தற்போது வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது.

Cyclone Montha Current Status: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருமவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த சூழலில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோன்தா புயலாக உருவாகியுள்ளது. மோன்தா புயல் இன்றுதான் உருவாகும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலையே உருவானது.
480 கி.மீட்டர் தொலைவில் மோன்தா:
மோன்தா புயல் உருவானது முதலே தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், ஆந்திரா, ஒடிசாவில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், வங்கக்கடலில் தென்மேற்கு திசையில் இருந்து வடகிழக்கு திசை நோக்கி மோன்தா புயல் தற்போது 17 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
தற்போது மோன்தா புயல் சென்னைக்கு கிழக்கில் 480 கி.மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிற்கு 530 கி.மீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு 560 கி.மீட்டர் தொலைவிலும், ஒடிசாவின் கோபால்புரில் இருந்து 720 கி.மீட்டர் தொலைவிலும் மற்றும் அந்தமானின் போர்ட் ப்ளேயரில் இருந்து 890 கி.மீட்டர் தொலைவிலும் தற்போது மோன்தா புயல் நிலை கொண்டுள்ளது.
110 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று:
இந்த மோன்தா புயல் நாளை கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மசிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகில் நாளை மோன்தா புயல் கரையை கடக்கும் என்று கருதப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 முதல் 100 கி.மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் அபாயம் உள்ளது. இந்த சூறைக்காற்று 110 கி.மீட்டர் வேகத்தில் வீசும் அபாயமும் உள்ளது.
Cyclone Alert for Andhra Pradesh, Yanam and adjoining South Odisha coasts https://t.co/n9eKhSx9I8 pic.twitter.com/mih0jjYlMu
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) October 27, 2025
எங்கெல்லாம் மழை?
இந்த மோன்தா புயல் காரணமாக தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை இன்று பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மோன்தா புயல் கரையை கடக்கும் நாளைய தினத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் அபாயம் உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை ஓரிரு இடங்களில் பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோரத்தில் அதிகரிக்கும் காற்றின் வேகம்:
இந்த மோன்தா புயல் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியின் கடற்கரை பகுதிகளில் 45 முதல் 55 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் அபாயம் உள்ளது. சில நேரங்களில் இந்த காற்று 65 கி.மீட்டர் வரை வீசும் வாய்ப்பும் உள்ளது.

இந்த மோன்தா புயல் காரணமாக ஆந்திராவிலே அதிக தாக்கம் இருக்கும் என்று கருதப்படுகிறது. அங்கு கடலோரங்களில் 60 முதல் 70 கி.மீட்டர் வரை சூறைக்காற்று வீசும். நாளை காலை முதல் 90 கி.மீட்டர் முதல் 100 கி.மீட்டர் வரை அங்கு புயல் காற்று வீச வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் இந்த சூறைக்காற்றின் வேகம் மெல்ல குறையும்.
இன்றும், நாளையும் எப்படி?
தமிழ்நாட்டில் இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் நாளைய தினத்தில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோன்தா புயல் காரணமாக தமிழ்நாட்டிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.





















