Chennai Metro: மிக்ஜாம் புயலால் எங்கும் சூழ்ந்த மழை நீர்... நாளை மெட்ரோ இயங்குமா? - வெளியான முக்கிய அறிவிப்பு..!
மிக்ஜாம் புயல் காரணமாக நாளை (டிசம்பர் 5) மெட்ரோ இரயில்கள் இயங்குவது குறித்து சென்னை மெட்ரே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மிக்ஜாம் புயலால் எங்கும் மழை நீர் சூழ்ந்த நிலையில் நாளை மெட்ரோ ரயில்கள் இயங்குமா என மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மிரட்டும் மிக்ஜாம்:
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மிக்ஜாம் புயல் தற்போது சென்னையிலிருந்து வடகிழக்கு திசையில் 80 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும் மிக்ஜாம் புயல் நெல்லூருக்கு தென்கிழக்கு திசையில் 110 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைவிட்டு விலகிச்செல்லும் மிக்ஜாம் புயல், தற்போது ஆந்திராவின் நெல்லூர் நோக்கி நகர்ந்து வருவதாகவும், மிக்ஜாம் புயலானது நாளை முற்பகலில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே பாபட்லா அருகே தீவிர புயலாக கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகமானது 90 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து மிக்ஜாம் புயல் தற்போது 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்கள்:
அதேநேரம், இந்த புயலின் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் அன்றாட வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் பெய்துள்ள இந்த மழையில் நகரமே திண்டாடி வரும் சூழலில், பல்வேறு இடங்களில் மின்சாரமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகளும் முடங்கிபோய் உள்ளது. ஆனாலும், சென்னையைப் பொறுத்த வரை மெட்ரோ சேவைகள் வழக்கம் போல் இயங்கி வருகிறது.
மெட்ரோ முக்கிய அறிவிப்பு:
இந்நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக நாளை (டிசம்பர் 5) ஒரு நாள் மட்டும் ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயங்குமென்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் இன்று (டிசம்பர் 4) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாளை (05.12.2023) MICHAUNG புயல் காரணமாக தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்ததை தொடர்ந்து, சென்னை மெட்ரோ இரயில்கள் புதிதாக திருத்தி அமைக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின் படி இயக்கப்படும்.
1. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
2. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
3. மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
மெட்ரோ இரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புயல் மற்றும் கனமழையின் காரணமாக நாளை (05.12.2023) தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம். அவசிய தேவை உள்ளவர்கள் மட்டும் பாதுகாப்பாக பயணம் செய்யுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது” என்று கூறியுள்ளது மெட்ரோ நிர்வாகம்.