Cyclone Michaung: மிக்ஜாம் புயல் பாதிப்பு.. சென்னையில் புறநகர் , எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவை ரத்து
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மிக்ஜாம் புயல் தற்போது சென்னையிலிருந்து வடகிழக்கு திசையில் 120 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னையில் நாளை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மிக்ஜாம் புயல் தற்போது சென்னையிலிருந்து வடகிழக்கு திசையில் 120 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும் மிக்ஜாம் புயல் நெல்லூருக்கு தென்கிழக்கு திசையில் 90 கிலோ மீட்டர் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைவிட்டு விலகிச்செல்லும் மிக்ஜாம் புயல், தற்போது ஆந்திராவின் நெல்லூர் நோக்கி நகர்ந்து வருவதாகவும், மிக்ஜாம் புயலானது நாளை முற்பகலில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே பாபட்லா அருகே தீவிர புயலாக கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகமானது 90 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இப்படியான நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 11 மணி நேரத்தில் சென்னையை பொறுத்தவரை நுங்கம்பாக்கத்தில் 20 செ.மீ., மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சென்னையில் மாநகர பேருந்துகள் எண்ணிக்கை பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் வெகுவாக குறைக்கப்பட்டது. மெட்ரோ ரயில்கள் விடுமுறை தின அட்டவணையை பின்பற்றி இயக்கப்பட்டன.
புறநகர் ரயில் சேவை இன்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால் முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மாநகராட்சி ஊழியர்கள் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் மற்றும் சரிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மிக்ஜாம் புயல் சென்னையை விட்டு நீங்கினாலும் அதன் பாதிப்பு கடுமையாக உள்ளது.சென்னையில் நள்ளிரவுக்கு மேல் படிப்படியாக மழையின் அளவு குறைய தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இப்படியான நிலையில் புறநகர் ரயில் சேவை நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேசமயம் புயல் பாதிப்பு காரணமாக சென்னையில் இருந்து 25 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.