Cuddalore : வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்! கடலூருக்கு கனமழை எச்சரிக்கை! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு...
கடலூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் எச்சரிக்கை.
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி
தென் இலங்கை மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நேற்று இலங்கை மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நேற்று இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என ஆய்வு மையம் கணித்திருக்கிறது.
இதன் காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்காலிலும் கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் பாதுகாப்புக்காக பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதையும், ஆற்றில் குளிக்கச் செல்வதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இடி மின்னல் உடன் கனமழை பெய்யும்போது, திறந்த வெளியில் நிற்பது, நீர் நிலைகளில் குளிப்பது, மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்
ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளில் (பிளாஸ்டிக் கவர்கள்) வைத்துப் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். டார்ச்லைட், மருந்துகள், பால், தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களைத் தயாராக வைத்திருக்க வேண்டியது அவசியம். வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில், தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். மழை / வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளைக் கட்டி வைக்கக் கூடாது. வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
அவசர உதவிக்கு !
மாவட்ட நிர்வாகம் சார்பில், பேரிடர் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரகாலக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, தொடர்பு எண் 04142 – 220 700 மேற்கண்ட தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்துப் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்
பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் பணிபுரியும் அனைத்து துறை அலுவலர்கள் மூலம் புகார்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்குத் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித் துறைகள் மூலம், மழைக்காலங்களில் நீர் தேங்கி நிற்பதை தடுக்கும் பொருட்டு அனைத்து நீர் நிலைகளிலும் தூர்வாரும் பணி முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும், அனைத்து முன்னேற்பாட்டு நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்றும் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.




















