பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் வரலாற்றுச் சின்னம்! ஆங்கிலேயர் கால ஆட்சியரகம்- எங்கு தெரியுமா?
தொன்மை வாய்ந்த கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எத்தனையோ அரசியல் முடிவுகளுக்கு களமாய் இருந்து வந்திருக்கிறது. பல வரலாற்று நாயகர்கள் ஆட்சியர்களாக இக்கட்டிடத்தை அலங்கரித்தும் இருக்கிறார்கள்.

கடலூர்: கடலுார் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டடம் பாழாகி வருவதைத் தவிர்க்க, பழமை மாறாமல் புதுப்பிக்க 16 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்ததைத் தொடர்ந்து புனரமைப்பு பணி துவங்கியது.
கடலுார் மஞ்சக்குப்பம் மைதானம் அருகே அமைந்துள்ளது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில் கலெக்டர் அலுவலகம் இயங்கி வந்தது. இக்கட்டடம் கடந்த 1897ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 127 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் கம்பீரமாக உள்ளது. இந்த அலுவலகத்தின் முன்புறம் உருவாக்கப்பட்ட பச்சை பசுமையான புல்வெளியை கோல்ஃப் மைதானமாக பயன்படுத்தி வந்தனர். இக்கட்டிடத்தில் ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டபோது, எல்.எம்.வின்ச் என்பவர் முதல் ஆட்சியராக பணி செய்தார்.
எல்.எம்.வின்ச் தொடங்கி 2015-ம் ஆண்டு சுரேஷ்குமார் வரை 118 ஆண்டுகளில் 92 ஆட்சியர்கள் இந்தக் கட்டிடத்தில் பணிபுரிந்துள்ளனர். தொன்மை வாய்ந்த கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எத்தனையோ அரசியல் முடிவுகளுக்கு களமாய் இருந்து வந்திருக்கிறது. பல வரலாற்று நாயகர்கள் ஆட்சியர்களாக இக்கட்டிடத்தை அலங்கரித்தும் இருக்கிறார்கள்.
இதில், சந்திரலேகா, சி.கே.கரியாலி, தங்கவேலு, தங்கசாமி, ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டவர்களை குறிப்பிடத்தக்கவர்களாக குறிப்பிடலாம். இக்கட்டிடம் கம்பீரத்தில் மட்டுமன்றி, காற்றோட்டத்துக்கும் பஞ்சம் இல்லாதது. சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும் மின்விசிறி இன்றியே குளுமையான சூழலில் இங்கு பணியாற்ற முடியும். நேர்த்தியாக சுடப்பட்ட செங்கலும் சுண்ணாம்பும் கொண்டு கட்டடப்பட்ட இக்கட்டிடத்தின் உறுதித் தன்மைக்கு வேறெந்த கட்டிடமும் இணையாக இருக்க முடியாது. இதன் கட்டிட நேர்த்தியை இங்கு வந்து சென்ற பலர் பாராட்டிச் சென்றதுண்டு.
பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ள இக்கட்டடத்தில் சில இடங்களில் மழைக்காலங்களில் ஒழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தூசு படிந்த நிலையில், கட்டடம் அலங்கோலமாக மாறியுள்ளது. கட்டடத்தில் பல இடங்களில் செடிகள் முளைத்து பலவீனமாகி வருகிறது. இதே நிலை நீடித்தால், விரைவில் கட்டடம் முழுதும் வீணாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை. கட்டடத்தில் பல இடங்களில் வவ்வால்கள் அடைந்துள்ளதால், துர்நாற்றமும் வீசுகிறது.
எனவே, பழைய ஆட்சியர் அலுவலக கட்டடத்தை, பழமை மாறாமல் புனரமைத்து பாதுகாக்க வேண்டும் என, மாவட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டில் கடலுார் துணை ஆட்சியர் இருந்த ஜானிடாம் வர்கீஸ், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை புதுப்பிக்க முதற் கட்ட முயற்சியில் இறங்கி, சென்னையில் இருந்து கட்டடக்கலை நிபுணர்களை வரவழைத்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஆட்சியர் பாலசுப்ரமணியம் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட புகழ்பெற்ற இந்த கட்டடம் பாரம்பரியம் மாறாமல் புனரமைக்க திட்டமிடப்பட்டு அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டது. அதன்படி தற்போது இக் கட்டடத்தை புனரமைக்க 16 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து புனரமைக்கும் பணி துவங்கியது.





















